ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாதிகள் தப்பிச் செல்வதற்கு உதவிய, ஜனாதிபதி விருது பெற்ற காஷ்மீர் டி.எஸ்.பி., பயங்கரவாதிகளுக்கு தன் வீட்டில் அடைக்கலம் தருவதை, பல ஆண்டுகளாகவே செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் போலீசில், டி.எஸ்.பி.,யாக பணியாற்றியவர் தேவிந்தர் சிங். வீர தீர செயலுக்காக, கடந்தாண்டு ஜனாதிபதி விருது பெற்றவர். இவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள், சமீபகாலமாக ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று குல்காம் அருகே, ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சென்ற காரை, போலீசார் மடக்கி சோதனை நடத்தினர். அந்த காரில், தேவிந்தர் சிங்குடன், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த இர்பான், நவீத் பாபு மற்றும் ரபி என்ற மூன்று பயங்கரவாதிகளும் இருந்தனர்.
இவர்கள், காஷ்மீரில் நடந்த பல தாக்குதல்களில் தேடப்பட்டு வந்தவர்கள். இதையடுத்து, நான்கு பேரையும், காஷ்மீர் போலீசார் கைது செய்தனர். காஷ்மீரிலிருந்து தப்பிச் செல்வதற்காக, தேவிந்தர் சிங் அவர்களுக்கு உதவியது விசாரணையில் தெரியவந்தது.
ரிசார்ட் போல..
இந்நிலையில் ஐ.பி, ரா மற்றும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேவிந்தர் சிங்கிடம் இன்று விசாரணை நடத்தினர். தேவிந்தர் சிங்கின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், கைது செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் கடந்த சில நாட்களாக தேவிந்தர் சிங் வீட்டில் தங்கியிருந்தது, கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து, நவீன ரக துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் கிடைத்துள்ளது.

அப்சல் குருவும்..
மேலும், உயரதிகாரி என்பதால், பயங்கரவாதிகளை வீட்டில் தங்க வைத்து, லஞ்சம் பெறுவதை பல ஆண்டுகளாக தேவிந்தர் சிங் செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. 2001 பார்லி,., தாக்குதலில் தூக்கிலிடப்பட்ட பயங்கரவாதி அப்சல் குருவும், தேவிந்தர் சிங்குக்கு பல பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறியிருந்தார். ஆனால் ரா, ஐ.பி. அதிகாரிகள் அதனை நம்பவில்லை.
2001 பார்லி., தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு டில்லியில் தங்க தேவிந்தர் சிங்தான் ஏற்பாடு செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது. பயங்கரவாதிகளுடனான தொடர்பை அடுத்து, ஜனாதிபதி விருது பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE