பேச்சு, பேட்டி, அறிக்கை | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 13, 2020
Share
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'தமிழக, பா.ஜ., தலைவருக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் பட்டியலில், உங்கள் பெயர் இருக்கிறதோ இல்லையோ, 'போட்டியில் நானும் இருக்கிறேன்' என, அடிக்கடி கூறி, பட்டியலில் இடம்பெற்று விடுவீர்கள் போல இருக்கிறது...' எனக் கூற வைக்கும் வகையில், நடிகர், எஸ்.வி.சேகர் பேட்டி: தமிழக பா.ஜ., தலைவர் தேர்வுக்கான பட்டியலில், என் பெயரும் இடம்பெற்றுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு, மாநில, பா.ஜ., தலைவர் பதவி கிடைத்தால், சிறப்பாக செயல்படுவேன்.

'தமிழகத்தின் தமிழ் போர்வையாளர்களை அழைத்துச் சென்றால், இலங்கையில் தமிழ் மேலும் வளர வாய்ப்பு உள்ளது...' என, கிண்டலாக கூற வைக்கும் வகையில், யாழ்ப்பாண தமிழக தேசிய கூட்டமைப்பு, எம்.பி., சரவணபவன் பேச்சு: இலங்கைத் தமிழர்கள், தாய் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பர். ஆனால், அவர்களிடம் இப்போது, புத்தக வாசிப்பு குறைந்து விட்டது; தமிழறிஞர்களும் அங்கு இல்லை. தமிழை அங்கு வளர்க்க வேண்டிய, கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

'நீங்களும் பல ஆண்டுகளாக கூறி வருகிறீர்கள்; மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் உள்ளனவே...' என, கவலை தெரிவிக்கும் வகையில், பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன்பேச்சு: பயங்கரவாதிகளால், எஸ்.ஐ., சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, சட்டசபையில் விவாதிக்கவில்லை. அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகள், கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. முஸ்லிம்கள் ஓட்டுக்காக, அவ்வாறு இருந்தன. பயங்கரவாதிகளின் கூடாரமாக, தமிழகம் மாறி விட்டது.

'அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியை விட்டு, எந்தச் சூழ்நிலையிலும் வெளியேற மாட்டோம். எங்களுக்கு ஏற்ற கட்சி, அது தான் என்ற உங்களின், 'மைண்ட் வாய்ஸ்' நன்கு கேட்கிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் முரளிதர ராவ் பேட்டி: தமிழகத்தில், தற்போதைய எங்களின் கூட்டணி தொடரும். சட்டசபை தேர்தலிலும், இந்த கூட்டணி தொடர்ந்தால் தான், நல்ல பலன்கள் கிடைக்கும். கூட்டணியை மேலும் வலுவடையச் செய்ய, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

'ஆனால், நான் மட்டும், லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்து விட்டேன்... என்றும் சொல்லுங்களேன்' என, எடுத்துக் கொடுக்கும் வகையில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு: துாத்துக்குடி, சக்தி வாய்ந்த மண். இங்கு நிறுவப்படும் எதுவும், தோல்வியடையாது. தரை, கடல், வான், ரயில் என, நான்கு வகையான போக்குவரத்தை கொண்ட நகரம் இது. இந்த நகரின் வளர்ச்சியில், என் பங்கு நிச்சயம் இருக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X