நாகை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நாகை மாவட்டத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த தடை

Added : ஜன 13, 2020

சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூரில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'ரேக்ளா ரேஸ்' நடத்த, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த சங்கமித்ரன் தாக்கல் செய்த மனு:தனிப்பட்ட விளம்பரம், புகழுக்காக, பணம் வசூலித்து, அரசியல்வாதிகளின் துணையுடன், ரேக்ளா போட்டி நடத்துகின்றனர். காளை, குதிரைகளை வைத்து, இந்தப் போட்டி நடத்தப் படுகிறது. இதனால், பல முறை ஜாதி சண்டை நடந்ததுள்ளது; பிராணிகளை, துன்புறுத்துவதும் உண்டு.இந்தப் போட்டிகளை, அரசு நடத்துவதில்லை; அரசியல் கட்சிகள் நடத்துகின்றன. திருக்கடையூரில், தேசிய நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

காலையில் துவங்கி, ஒரு நாள் முழுவதும் நடக்கும். மற்ற வாகனங்கள் செல்ல முடியாது. மருத்துவமனை, கோவில்களுக்கு, மக்கள் செல்ல முடியாது. ரேக்ளா போட்டி நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என, பலமுறை மனு அளித்துள்ளேன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் ரேக்ளா போட்டி நடத்த, தடை விதிக்க வேண்டும். போட்டி நடத்துபவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். போட்டி நடத்த, வழிமுறைகள் ஏற்படுத்த குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சி.டி.சரவணன் ஆஜரானார். நாகை மாவட்டம், திருக்கடையூரில், ரேக்ளா போட்டி நடத்த, ௧௭ம் தேதி வரை, டிவிஷன் பெஞ்ச் தடை விதித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X