குடியிருப்புகள் இடிப்பு: கேரள அரசு பதில் மனு

Added : ஜன 13, 2020
Advertisement

புதுடில்லி : கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மராடு பகுதியில், விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கொச்சியின் மராடு பகுதியில், கடலோர பாதுகாப்பு மண்டல விதிமுறைகளை மீறி, அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டிருந்தன.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்கும்படி, கடந்தாண்டு, செப்., 27ல் தீர்ப்பு அளித்தது. 'பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, தலா, 25 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும்; 138 நாட்களுக்குள் கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டும்' என, உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அதையடுத்து, நான்கு அடுக்கு மாடி குடியிருப்புகள், பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. இந்நிலையில், கேரள அரசின் சார்பில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டுள்ளன.இங்கு குடியிருப்புகள் வாங்கியவர்களுக்கு, ஏற்கனவே, 27.99 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 33.51 கோடி ரூபாய் விரைவில் வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, 'இடிக்கப்பட்ட கட்டுமான கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றப்படுவதை, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்' என, அமர்வு உத்தரவிட்டது. வழக்கின் விசாரணை, பிப்., 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.உள்ளூர் மக்கள் போராட்டம் விதிமீறல் கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்பட்டுள்ள துாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்ளூர் மக்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்பகுதி மக்கள் கூறியுள்ளதாவது:கட்டடங்கள் இடிக்கப்பட்டதால், அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் துாசு படிந்துள்ளது. இதனால், சுகாதார பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த துாசுகளை அகற்றவும், அவ்வப்போது தண்ணீர் ஊற்றி அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்தக் கட்டடங்கள் இடிக்கப்பட்டதால், 75 ஆயிரம் டன் கான்கிரீட் கட்டுமானக் கழிவுகள் அங்கு உள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இவற்றை முழுமையாக அகற்றுவதற்கு அதிக காலம் பிடிக்கும் என, தெரிகிறது.

இதற்கிடையே துாசு பரவுவதை தடுக்கும் வகையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து, கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X