பெண்களிடம் ஜொள்ளு... இது, போலீசின் லொள்ளு!

Added : ஜன 14, 2020 | |
Advertisement
பொங்கல் பண்டிகை பொருட்கள் வாங்க சித்ராவும், மித்ராவும், வண்டியில் புறப்பட்டனர். ஊரக உள்ளாட்சியில், மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவரின், ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சொல்றது சரியாத்தானே இருக்கு,'' என்றாள்.''இது தெரிஞ்ச விஷயம்தானே. இதில என்னடி புதுசா
 பெண்களிடம் ஜொள்ளு... இது, போலீசின் லொள்ளு!

பொங்கல் பண்டிகை பொருட்கள் வாங்க சித்ராவும், மித்ராவும், வண்டியில் புறப்பட்டனர். ஊரக உள்ளாட்சியில், மறைமுக தேர்தலில் வெற்றி பெற்றவரின், ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி கொண்டிருந்தனர்.அதைப்பார்த்த மித்ரா, ''பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சொல்றது சரியாத்தானே இருக்கு,'' என்றாள்.''இது தெரிஞ்ச விஷயம்தானே.
இதில என்னடி புதுசா கண்டுபிடிச்சிட்டே?''''அதைத்தான் சொல்கிறேன். சபா நாயகர், மாவட்ட வி.ஐ.பி., ஒரு பக்கமும், துணை சபாநாயகர், மாவட்ட செயலாளர் ஒரு அணியாகவும் இருந்து, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பதவியை பிடிக்க திட்டம் போட்டாங்க. ரூரலில், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி அதிகமாக இருந்ததால், மாநகர் மாவட்டத்துக்கு தலைவர் பதவி கொடுக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தாங்க''''சரி... அப்புறம் என்னாச்சு?''''ரூரல் மாவட்ட செயலாளரான பொள்ளாச்சிக்காரர் செல்வாக்கு உயர்ந்து விடும் என, கூட்டிக்கழித்து பார்த்த வி.ஐ.பி., தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்களையும் வைத்து, அவரோட 'கேன்டிடேட்டை' ஜெயிக்க வச்சிட்டாரு,''''அக்கா... இதுக்காக, தலைக்கு, 'ஐந்து லகரம்' சப்ளை செஞ்சாராம். ஆரம்பத்துலயே, கவனிப்பு பலமா இருக்கறதால, 'வலுவா' இருக்கற அணிக்கு ரொம்ப சந்தோஷமா ஓட்டு போட்டிருக்காங்க,''''அடேங்கப்பா... இப்படியெல்லாம் நடந்திருக்கிறது. அப்ப 'பணநாயகம்'ன்னு சொல்லு,'' என, சிரித்த சித்ரா, ''அது சரிடி. வைஸ் சேர்மன் பதவியிலும் 'கேம்' ஆடிட்டாங்களா?''''ஆமாங்க்கா... மாவட்ட பஞ்சாயத்தில், எதாச்சும், 'பஞ்சாயத்து' வந்திடக்கூடாதுன்னு, வைஸ் சேர்மனுக்கும், அவிநாசியில் ஜெயிச்ச பெண் ஒருவரை தேர்வு செஞ்சிட்டாங்க. இதனால, 'ஜென்ட்ஸ்' எல்லாம், அதிருப்தியில இருக்காங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.'ஆளும்கட்சியை பொறுத்தவரை, இந்த தடவை ஒன்பது யூனியன் கைவிட்டு போயிடுச்சு. இதில, கார்ப்ரேஷன், முனிசிபல் தேர்தல் வந்தால், நிலைமை மோசமாயிடும். அதனால, இந்த கோஷ்டி மோதலை கைவிட்டுட்டு, கட்டுப்பாடோட இருக்கோணும்னு, சீனியர்கள் 'ஓபனா' பேசிட்டிருக்காங்களாம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... நீங்க இங்கயாவது பரவாயில்ல. காங்கயத்தில் நடந்த கூத்து தெரியுங்களா?''''அப்படியா?'' ஆச்சரியமாக கேட்டாள் சித்ரா.''அ.தி.மு.க., தி.மு.க.,வில் சீட் கேட்டு கிடைக்காதவர்கள், சுயேச்சையா போட்டியிட்டு ஜெயிச்சிட்டாங்க. அதில ஒருத்தர் சேர்மனாகவும், இன்னொரு பெண் கவுன்சிலர் வைஸ் சேர்மனாகவும் ஆயிட்டாங்க.
இதனால, ரெண்டு தரப்பிலும், 'செம காண்டில்' இருக்காங்களாம்,''''உள்ளாட்சின்னு சொன்னாலே உள்ளடிதான்டி. அதைவிட காங்கிரஸ் கட்சியில, கோஷ்டிப்பூசலால், வைஸ் சேர்மன் பதவி பறிபோயிடுச்சாம்,''''இது எங்கேங்க்கா...''''பல்லடத்தில்தான். சேர்மன் பதவி தி.மு.க., ஜெயிச்சிட்டாங்க. வைஸ் சேர்மன், காங்கிரசுக்கு குடுத்தாங்க. ஆனா, ரெண்டு கவுன்சிலர்களுக்கு இடையே கோஷ்டி பூசலை பார்த்த தி.மு.க., வினர், 'எதுக்கு பிரச்னை? நாங்களே நின்னுக்கறோம்னு' சொல்லிட்டு, வைஸ் சேர்மனையும் புடிச்சிட்டாங்க. கோஷ்டி கானத்தால பதவி போனுதுதான் மிச்சம்டி'' என கூறி சிரித்தாள் சித்ரா.வண்டி, ஜெய்வாபாய் பள்ளி வழியே சென்று கொண்டிருந்தது.பள்ளியை பார்த்த சித்ரா, ''மித்து, இந்த ஸ்கூலில் நடந்த விழாவில், டீச்சர்ைஸ, சி.இ.ஓ., சத்தம் போட்டாராம்,''''அப்டிங்களா? என்ன விஷயங்க்கா....!''''இன்ஸ்பையர்' சயின்ஸ் எக்ஸிபிஷனுக்கு வந்த சி.இ.ஓ.,வை, வரவேற்க, மாணவியர் கையில பூங்கொத்து கொடுத்து நிக்க வச்சுட்டாங்க,''''அதைப்பார்த்த அவரு, எதுக்கு ஸ்டூடண்ட்ைஸ மணிக்கணக்கில நிக்க வைக் கிறீங்க. மொதல்ல, அவங்களை கிளாஸ்க்கு போகச் சொல்லுங்க. யார், வந்தாலும், இனிமே, இப்டி நிக்க வைக்காதீங்கனு' அட்வைஸ் செஞ்சாராம்,'' சொன்ன சித்ரா, போலீஸ் ஜீப் செல்வதை பார்த்து, ''சிலரால, எல்லாத்துக்கும் கெட்ட பேரு,'' என்றாள்.''அக்கா... புரியற மாதிரி சொல்லுங்க''''சிட்டியில இருக்கிற, போலீஸ் அதிகாரிகளில் ரெண்டு பேர், பயங்கர 'ஜொள்ளு' பார்ட்டியாம்.
ஸ்டேஷனுக்கு பெட்டிஷனுடன் யாராவது வந்தாங்கன்னா, தன்னோட மொபைல் நெம்பரை கொடுத்து, ஏதாவது பிரச்னைன்னா, கூப்பிடும்மானு சொல்றாங்களாம்,''''அதில, ஒருத்தர் செஞ்ச 'ஓவர் ஜொள்ளு' மேட்டரை கேட்டு, மத்த போலீசார், தலையில அடிச்சிட்டாங்களாம்,''''அப்டி என்னக்கா நடந்துச்சு?''''ஊர்க்காவல் படைக்கு போன வாரம் செலக்ஷன் நடந்தது. அதுக்காக, ஒரு பெண்ணை, ஆபீசர் தன்னோட ஆபீசுக்கு வரச்சொல்லிட்டாராம்,''''அந்த பொண்ணும் அங்கே போனதுக்கு, போலீஸ்காரங்க, 'இங்க எதுக்கும்மா வந்தே? செலக்ஷனுக்கு அங்கே போங்க'னு சொல்லி அனுப்பி வச்சாங்களாம்.
வரவர 'யானைகளின் அரசனோட' தொந்தரவு ஜாஸ்தியாயிட்டே வருதுங்க்கா. கமிஷனரும் கண்டுக்க மாட்டேங்கிறாராம்,'' என்றாள் சித்ரா.''அக்கா... சொல்ல மறந்துட்டேன். வெள்ளகோவில் பக்கத்தில வைரமடை, பல்லடத்துக்கிட்ட வாவிபாளையம் என ரெண்டு இடத்திலும், செக்போஸ்டில், வசூலை வாரிகுவிக்கிறாங்களாம். எல்லா ரெக்கார்ட்ஸ் இருந்தாலும், 500ஐ கொடுன்னு கேட்டே வாங்குறாங்களாம்,''''அதேமாதிரி, உடுமலை சப்-டிவிஷனுக்கு உட்பட்ட '....லிங்கம்' ஸ்டேஷனில், முக்கியமான ரெண்டு அதிகாரிங்க, லாட்டரி, சரக்கு, கஞ்சா... இப்டி சட்டவிரோத கும்பல்களுடன் 'லிங்க்' வச்சிட்டு, 'மாமூல்' வாரி குவிக்கிறாங்களாம். பக்கத்தில இருக்கிற குவாரிகளில், லிமிட்டை தாண்டி, தோண்டி எடுத்துட்டே இருக்காங்களாம். இப்டியே போச்சுன்னா, குரூடாயில் வந்திடும்னு ஜனங்க பேசிக்கிறாங்க,''''உண்மைதாங்க்கா... கீழிலிருந்து மேல வரைக்கும் 'கவனி'க்கிறதால, ஆபீசர்களும் கண்டுக்கறதில்ல. இப்ப பாருங்க... காசியில் வாசி ஊருக்கு பக்கத்திலுள்ள 'பழைய கரை' ஊரில் நடந்த எலக்ஷனில், ஒரு 'கேன்டிடேட்' ஒரு கோடி ரூபாய் செலவு பண்ணாராம்,''''அடேங்கப்பா... தலைவராகிறதுக்கு இத்தனை செலவு பண்றாங்களா? அப்படி கொள்முதலை எப்படியாவது எடுத்திடணும்னுதான் நினைப்பாங்க.
'ருசி கண்ட பூனை' சும்மா இருக்குமா?'' என்ற சித்ரா, காமராஜர் ரோட்டில், 'பார்க்கிங்' சைடில் நிறுத்தி, ''மித்து... சட்டுப்புட்டுனு பொருள் வாங்கிட்டு கிளம்பிடலாம்'' என்றாள்.கரும்பு, பொங்கல் பானை, மஞ்சள் கொத்து, கலர் கோலப்பொடி, மக்கள் கூட்டம் என, கிராமத்து 'எபக்டில்' சிட்டி காட்சியளித்தது. ''அக்கா.. சூப்பருங்க்கா...'' என்று குஷியோடு, மித்ரா விறுவிறுவென நடந்தாள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X