சூலுார்:உள்ளாட்சித் தேர்தல் முடிந்து, புதிய தலைவர்கள் பொறுப்பேற்றுள்ளதால், ஊராட்சி செயலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.தமிழகம் முழுக்க ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. புதிய தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பொறுப்பேற்றுள்ளனர்.கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக, ஊராட்சி செயலாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தனர். ஊராட்சி அலுவலகத்துக்கு வரும் மக்கள், தங்கள் பிரச்னைகளை செயலாளரிடம் முறையிட்டு வந்தனர்.பல ஊராட்சிகளில், வெளியூரைச் சேர்ந்தவர்கள், செயலாளர்களாக பணியாற்றியதால், உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க முடியாமல் திணறி வந்தனர். 'எப்போது தேர்தல் நடக்கும்; எப்போது தலைவர்கள் வருவார்கள்' என, அரசியல் கட்சியினரை விட, ஊராட்சி செயலாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.ஒரு வழியாக தேர்தல் நடந்து முடிந்து, தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பொறுப்பை ஏற்றுள்ளனர். இதனால், ஊராட்சி அலுவலகங்களுக்கு வரும் மக்கள் நேரடியாக தலைவரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும் என்பதால், ஊராட்சி செயலாளர்கள் பணிச்சுமை குறையும்.தலைவர் கூறும் வேலைகளையும், அதிகாரிகள் தரும் பணிகளையும் செய்தால் மட்டும் போதுமானது.ஊராட்சி செயலாளர்கள் கூறுகையில், 'புது தலைவர்கள் பொறுப்பு ஏற்று உள்ளதால், இனி, மக்கள் அவர்களை நேரடியாகச் சென்று சந்திப்பர். நாங்கள் அலுவலக பணிகளை கவனிப்போம். இனி, அனைத்து ஊராட்சிகளிலும் பணிகள் வேகமாகவும், தொய்வின்றியும் நடக்கும் நிலை ஏற்படும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE