காட்டு யானைகளால் வாகனங்கள் சேதம்: துடியலூர் மக்கள் அச்சம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டு யானைகளால் வாகனங்கள் சேதம்: துடியலூர் மக்கள் அச்சம்

Added : ஜன 14, 2020

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே, காட்டு யானைகளால் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.கோவை வடக்கு, புறநகர பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. தினசரி மாலை, மலையோர கிராமங்களை முற்றுகையிடும் யானைகள், விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன.
காட்டு யானைகளை கட்டுப்படுத்த, இதுவரை வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு போதுமான பலன் கிடைக்கவில்லை.நேற்று அதிகாலை, சின்னத்தடாகம் அருகே, பாப்பநாயக்கன் பாளையம் கிராமம், பாலாஜி தோட்டத்திற்குள் குட்டியுடன் காட்டு யானை புகுந்தது. தோட்டத்து சாளை முன் நிறுத்தியிருந்த இரண்டு பைக்களை கீழே தள்ளி, மிதித்து சேதப்படுத்தியது.பின், குட்டி யானை வீட்டின் கதவை தள்ளி, திறந்து, உள்ளே நுழைந்தது. அங்கிருந்த அரிசி, பருப்பு மூட்டைகளை கீழே தள்ளி சேதப்படுத்தியது. வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த சாவித்திரி, 60, பயந்து பின்புற கதவு வழியாக ஓடி உயிர் தப்பினார்.காட்டு யானைகளின் நடமாட்டத்தை அறிந்து, அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த, வேட்டை தடுப்பு காவலர்களும், யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 10 நாட்களாக பாப்பநாயக்கன் பாளையம், நஞ்சுண்டாபுரம், மடத்துார் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காட்டு யானைகளை மலையடிவாரத்திலேயே தடுத்து, காட்டிற்குள் திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பயிர்ச் சாதம், உயிர்ச் சேதம் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X