நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: மாணவர்களிடம் ஆர்வம் குறைவு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்பு: மாணவர்களிடம் ஆர்வம் குறைவு!

Added : ஜன 14, 2020
Share

அன்னுார்:'நீட்' தேர்வுக்கான பயிற்சி வகுப்புக்கு, மிக குறைந்த அளவில் மாணவர்கள் வருகை புரிகின்றனர்.மருத்துவ பட்டப்படிப்பில் சேர, 'நீட்' என்னும் நுழைவு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், 'நீட்' தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வி துறை, முன்னணி தனியார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 மாணவர்களுக்கு வார இறுதி நாட்களில் பயிற்சி அளித்து வருகிறது.
அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், ஆணையூர், கெம்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, சொக்கம்பாளையம், அன்னுார் கே.ஜி.பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய, ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றிலிருந்து வரும் மாணவ, மாணவியருக்கு அன்னுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'நீட்' பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. 'சாட்டிலைட்' தொடர்பு மூலம், பெரிய திரையில், 'நீட்' குறித்த பயிற்சி, தனியார் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தரப்படும் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. ஆனால், சாட்டிலைட் தொடர்பு கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால், வழக்கமான முறையிலேயே தான் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் காட்டம்பட்டி, கெம்பநாயக்கன் பாளையம், ஆணையூர், சொக்கம்பாளையத்தில் இருந்து அன்னுார் வர, குறைவான பஸ்கள் உள்ளதால், மிகவும் முன்னதாகவே மாணவர்கள் புறப்பட்டு வர வேண்டி உள்ளது. பயிற்சி கையேடுகள், பழைய வினாத்தாள்கள் ஆகியவற்றை அச்சடித்து மாணவர்களுக்கு தருவதில்லை.இதனால் இந்த பயிற்சி வகுப்புக்கு மிக குறைவான மாணவர்கள் தான் வருகின்றனர். பயிற்சி வகுப்புக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் இந்த ஆண்டு 'நீட்' தேர்விலும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது அரிதாகவே இருக்கும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X