பொது செய்தி

தமிழ்நாடு

காலி! அரசு மருத்துவமனையில் டாக்டர் பணியிடம்...சங்கராபுரத்தில் நோயாளிகள் கடும் அவதி

Added : ஜன 14, 2020
Share
Advertisement

சங்கராபுரம்:சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பெயரளவிற்கு உள்ள இம்மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவும், மருத்துவமனைக்கு தேவையான டாக்டர் மற்றும் செவிலியர்களை போர்க்கால அடிப்படையில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சங்கராபுரம் நகரம் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக மாறி வருகிறது. சங்கராபுரத்தில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 96ம் ஆண்டு அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்தபோது 5 டாக்டர்கள் பணியில் இருந்தனர்.அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின் ஆரம்ப சுகாதார நிலையமாகவும் இல்லாமல், அரசு மருத்துவமனையாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலையில் உள்ளது. இந்த மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாத நிலை நீடித்து வருகிறது.சங்கராபுரம் பகுதியைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் சங்கராபுரம், பொய்க்குனம், பாண்டலம், தியாகராஜபுரம், எஸ்.வி.பாளையம், பூட்டை, செம்பராம்பட்டு, வடசெட்டியந்துார், உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 400க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.இம்மருத்துவமனையில், 4 டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர். அதில், ஒரு டாக்டர் மாற்றுப்பணியில் சென்று விட்டார். ஒரு பெண் டாக்டர் பிரசவகால விடுப்பில் சென்று விட்டார். இருக்கிற 2 டாக்டர்களில் ஒருவர் ஓ.பி., பிரிவிலும், ஒருவர் உள் நோயாளிகள் பிரிவையும் கவனிக்கின்றனர்.தற்போது, சங்கராபுரம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெளிநோயாளிகள் பிரிவில் ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. இதனால் வயதான நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் காலை வந்து மதியம் சென்று விடுகின்றனர்.
மதிய நேரங்களில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் டாக்டர்கள் பணியில் இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உள்ளது. இதில் பலர் போகும் வழியிலேயே உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.எனவே, சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்குத் தேவையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கக்கோரி சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்பு சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் கிடையாது.
பெயரளவிற்கு உள்ள சங்கராபுரம் அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படவும், மருத்துவமனைக்கு தேனையான டாக்டர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் பிரேத பரிசோதனை கூடம் செயல்படவும் கள்ளக்குறிச்சி கலெக்டர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X