இந்த செய்தியை கேட்க
சென்னை:இலவச அரிசி வழங்குவதற்கு பதில், பணமாக வழங்கும்படி, கவர்னர் எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, புதுச்சேரி முதல்வர் தாக்கல் செய்த மனுவின் விசாரணையை, வரும்,24ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்த மனு:புதுச்சேரி மாநில நிர்வாகியாக இருப்பவர், இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடுகிறார். மாநில அமைச்சரவை எடுத்த முடிவில் இருந்து மாறுபட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இலவச அரிசி வழங்குவதை நிறுத்துவதாகவும், அதற்கு பதில் பணமாக வழங்கவும், கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
அரிசிக்கு பதில் பணமாக வழங்கும்படி, புதுச்சேரி அரசுக்கு ஆலோசனை வழங்கி, மத்திய அரசும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை வாபஸ் பெறும்படி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன். அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக, கவர்னர் எடுத்த நடவடிக்கை; மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து, இலவச அரிசி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து நடத்த, அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.சரவணன், மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், கவர்னர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சோமயாஜூ ஆஜராகினர். விசாரணையை, வரும், 24ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE