கோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது

Added : ஜன 14, 2020

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், போட்டோ எடுத்ததை தட்டிக் கேட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தாக்கிய, தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ மண்டபத்தில், தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் திருப்பணிக்குழு அதிகாரி நாடிமுத்து, காவலாளிகள் ராஜ்குமார், விஜய் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, கோவிலுக்கு சுற்றுலா வந்த, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் திருமல கிரியைச் சேர்ந்த சுந்தர் சர்மா, 65, அவரது மனைவி மஞ்சு, 64, ஆகியோர், தனி அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஓவியங்களை போட்டோ எடுக்க முயன்றனர். காவலாளி ராஜ்குமார், அதிகாரி நாடிமுத்து ஆகியோர், 'இங்கு படம் எடுக்கக் கூடாது' எனக் கூறி தடுத்ததால், தகராறு ஏற்பட்டது. தம்பதியரால் தாக்கப்பட்டதில், நாடிமுத்துவின் மூக்கு கண்ணாடி உடைந்தது. ராஜ்குமாருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. உதவி கமிஷனர் கிருஷ்ணனையும், அவர்கள் தாக்கினர். காயம் அடைந்த ராஜ்குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார் புகார்படி, தஞ்சை மேற்கு போலீசார், தெலுங்கானா தம்பதியை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X