அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : ஜன 14, 2020

சாலையில் நிற்கும் கம்பத்தால் பாதிப்பு: ராசிபுரத்தில் இருந்து, நாமக்கல் செல்லும் சாலையில் ரயில்வே மேம்பாலத்தை அடுத்து முனியப்பன் கோவில் பகுதியில் சிறிய வளைவு உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால், வேகத்தடை மற்றும் பேரிகார்டு வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் சாலையை அகலப்படுத்திவிட்டனர். இப்போது, சாலையோரம் இருந்த மின்கம்பம் சாலைக்கு வந்துவிட்டது.
புதிய சாலை அமைக்கணும்! குமாரபாளையம், நகராட்சி அலுவலகம் அருகே, பழைய காவிரி பாலத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைய நேரிடுகிறது. பள்ளம் இல்லாத இடங்களில் என்ற நோக்கத்துடன் ஓட்டுவதால், நடந்து செல்வோர் மீது மோதும் நிலை ஏற்பட்டு பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பவானியை இணைக்கும் சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ளதால், இந்த சாலையை, புதிய சாலையாக மாற்ற வேண்டும்.

பகலில் எரியும் மின்விளக்கு: எலச்சிபாளையம் ஒன்றியம், சின்னமணலி பஞ்., சேர்வாம்பட்டி மயானத்தில் இருந்து பெரியமணலி செல்லும் சாலையில் அமைந்துள்ள மின்கம்பத்தில், 24 மணிநேரமும் மின்விளக்கு எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாவதுடன், மின்விளக்குகள் பழுதடைய வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால், பஞ்சாயத்திற்கு இழப்பு ஏற்படும். எனவே, பகல் நேரத்தில் அவற்றை அணைத்து விடவும், இரவு நேரங்களில் எரியவிடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலையோரம் குப்பை குவிப்பு: பள்ளிபாளையம் ஒன்றியம், கோட்டக்காடு பகுதியில் கடந்த ஒரு மாதமாக சாலையோரத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது. இது, அதிகளவு சேர்ந்து, மையப்பகுதி வரை வந்து விட்டதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், அருகில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இங்கு குப்பை கொட்ட தடை விதித்து, எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

அங்கன்வாடி அருகே முட்புதர் ஆக்கிரமிப்பு: எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை பஞ்., எளையாம்பாளையத்தில் அங்கன்வாடி மையத்தில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். மையத்தின் முன்புறத்தில் கடந்த பல மாதங்களாக முட்புதர்கள் நிறைந்துள்ளன. அருகே குடியிருப்புகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. விஷ ஜந்துகள் நடமாடி வருவதால், குழந்தைகளையும், பொதுமக்களுக்கும் அசம்பாவிதம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பகுதியினர் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X