தமிழ்நாடு

மாட்டு வண்டி மணல் ரூ.2,500க்கு விற்பனை: கரூரில் பொதுமக்கள் புலம்பல்

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: கரூர் மாவட்டத்தில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் மூலம், மணல் அள்ளிச் செல்லப்படுகிறது. ஆனால் ஒரு லோடு மணல், 2,500 ரூபாய் வரை விற்கப்படுவதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மணல் அள்ள, 2017 இறுதியில், இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, 10க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஆனால், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளப்பட்டு, லாரிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதனால், 'மாட்டு வண்டிகளிலும் மணல் அள்ளக்கூடாது' என, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. காவிரியாற்று பகுதிகளில் இருந்த, மாட்டு வண்டிகள் வழித்தடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, குழிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், வருவாய்த்துறை, போலீசார் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது கண்காணிக்கப்பட்டது. மாட்டு வண்டி உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், மாட்டு வண்டி உரிமையாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, கலெக்டர் அலுவலகம், குளித்தலை மற்றும் கரூர் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் மணல் அள்ள அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். மேலும், சிறியளவிலான கட்டட பணிகளும் நிறுத்தப்பட்டதால், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதை கருத்தில் கொண்டு, 'லாரிகளுக்கு மணல் சப்ளை செய்யக் கூடாது, ஒரு மாட்டு வண்டிக்கு ஒரு லோடுதான் அள்ள வேண்டும். இரவு, 11:00 முதல், அதிகாலை, 5:00 மணிக்குள் மணலை அள்ளி சென்று விட வேண்டும்' என, வாய் மொழியாக, அதிகாரிகள் தரப்பில் மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதை, பயன்படுத்திக் கொண்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள், காவிரியாற்று பகுதியில் கடந்த ஒன்றரை மாத காலமாக அனுமதி இல்லாமல், பொதுப்பணி துறைக்கு உரிய கட்டணம் செலுத்தாமல் மீண்டும் மணல் அள்ளத் துவங்கினர். ஆனால், ஒரு லோடு மாட்டு வண்டி மணலை, அதிகபட்சமாக, 2,500 ரூபாய் வரை விற்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது: வழக்கமாக, ஒரு லோடு மாட்டு வண்டி மணல், 750 ரூபாய் முதல், 1,200 ரூபாய் வரை கிடைத்தது. தற்போது, இடத்தை பொறுத்து, 2,000 முதல், 2,500 ரூபாய் வரை விற்கின்றனர். கேட்டால், லாரிக்கு சப்ளைக்கு செய்தால், 5,000 ரூபாய் தருகின்றனர் என மாட்டு வண்டி உரிமையாளர்கள் பேரம் பேசுகின்றனர் என, கூறுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மணல் அள்ள விதிக்கப்பட்ட தடையால், கரூர் மாவட்டத்தில் கட்டட பணி பாதிக்கக் கூடாது மற்றும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்வதை கண்டு கொள்ளாமல் உள்ளது. ஆனால், மாட்டு வண்டி உரிமையாளர்கள் அதிக கட்டணத்துக்கு மணலை, பொது மக்களுக்கு விற்பனை செய்வதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X