பொது செய்தி

தமிழ்நாடு

'பி.எஸ்.என்.எல்., டவர் இருக்கு; சிக்னல் இருக்காது': ஓராண்டாக அல்லாடும் மலை கிராமத்து மக்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே, மலை கிராமத்தில் பழுதடைந்த பி.எஸ்.என்.எல்., டவரால், கடந்த ஓராண்டுக்கு மேலாக அவசர தேவைக்கு கூட, போனை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் யூனியன், கடம்பூர் மலையில், 20 கி.மீ., தூரத்தில் அடர் வனப்பகுதியில் குன்றி பஞ்சாயத்து உள்ளது. இப்பஞ்சாயத்தில் மாகாளிதொட்டி, குஜம்பாளையம், நாயக்கன்தொட்டி, பெரிய குன்றி, சின்ன குன்றி, குன்றி உள்ளிட்ட, 17 குக்கிராமங்கள் உள்ளன. நான்கு கி.மீ., சுற்றளவுள்ள இப்பஞ்.,ல், 1,300 குடும்பங்களை சேர்ந்த, 5,000 பேர் வசிக்கின்றனர். கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் தொலைபேசி கோபுரம் அமைத்து, மொபைல்போன் சேவை அலைவரிசை வழங்கப்பட்டது. கடந்த, பிப்.,ல் இந்த கோபுரம் பழுதானது. இப்பகுதியினர் பல முறை புகார் செய்தும், இன்று வரை சீராகாததால் ஆம்புலன்ஸ், போலீஸ் உள்ளிட்ட அவசர அழைப்புக்கு கூட சிரமப்படுகின்றனர்.

இது குறித்து, பெரியகுன்றியை சேர்ந்த அப்துல்காதர் கூறியதாவது: குன்றி பஞ்.,ல் 40 வயதுள்ள ஆண்கள், தங்கள் குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு, திருப்பூரில் பனியன் கம்பெனியிலும், பிற பகுதிகளில் கரும்பு வெட்டவும் செல்கின்றனர். குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முறை வருவதால், மற்ற நாட்களில் போன் மூலம் மட்டுமே பேச முடிகிறது. தவிர, ஆம்புலன்ஸ், போலீஸ், வனத்துறை, தீயணைப்பு என எந்த அவசர அழைப்பையும் பயன்படுத்த முடியவில்லை. கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன், வனத்துறையின் கடும் நிபந்தனையுடன், அப்போதைய மத்திய அமைச்சர் இளங்கோவன், இங்கு தொலைபேசி டவர் அமைக்க அனுமதி பெற்று, செயல்படுத்த உதவினார். இப்பகுதியில் உள்ள, 1,300 வீடுகளில் பெரும்பாலானோர் மொபைல் போன் வைத்துள்ளனர். சாலை, பஸ், வாகன வசதி என எதுவும் இல்லாத மக்களுக்கு, பி.எஸ்.என்.எல்., டவரை சீரமைக்காததால் சிரமமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குன்றி பஞ்., தலைவர் மாதேஸ் கூறியதாவது: பஞ்., தேர்தலின்போதும், பஞ்., தலைவராகி மக்களை சந்திக்கும்போதும், டெலிபோன் டவரை சீரமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுகின்றனர். பி.எஸ்.என்.எல்., அதிகாரிகளிடம் கூறிவிட்டோம். நடவடிக்கை இல்லை. குன்றி பஞ்., பகுதியில் இருந்து தினமும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கடம்பூர், சத்தியமங்கலம் செல்கின்றனர். வீடு வந்தால்தான், அவர் என்ன ஆனார் என்பது தெரியவரும். இப்பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளில் வனத்துறை ஊழியர்கள் மட்டும், 10க்கும் மேற்பட்டோர் யானை தாக்கி இறந்துள்ளனர். விலங்குகள் அச்சம் உள்ள இப்பகுதியில், தொலை தொடர்பு மிகவும் அவசியம். பி.எஸ்.என்.எல்., டவரில் தொழில்நுட்ப கோளாறுதான் ஏற்பட்டுள்ளது. புதிதாக நிறுவ வேண்டியதில்லை. அதைக்கூட செய்து கொடுக்க மனம் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X