பழைய ரூபாய் நோட்டுகளுடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழைய ரூபாய் நோட்டுகளுடன் மனு கொடுக்க வந்த மூதாட்டி

Added : ஜன 14, 2020
Share

வேலூர்: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றித்தரும்படி, 12 ஆயிரம் ரூபாயுடன் மூதாட்டி கலெக்டர் அலுவலகம் வந்தார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, வேலூர் சலவன்பேட்டை சூளைமேட்டை சேர்ந்த மூதாட்டி புவனேஸ்வரி, 65, வந்தார். அவர், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட, 500 மற்றும், 1,000 ரூபாய் நோட்டுகள், 12 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார். அதனுடன், தான் கொண்டு வந்த மனுவை, டி.ஆர்.ஓ., பார்த்திபனிடம் வழங்கினார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது: கணவரை இழந்து, யாருடைய ஆதரவுமின்றி குடிசையில் வசிக்கிறேன். கூலி வேலை செய்து அதில் சேர்ந்த, 12 ஆயிரம் ரூபாயை, பானையில் போட்டு வைத்திருந்தேன். மருத்துவ செலவுக்கு அந்த பணத்தை கொடுத்தபோது வாங்க மறுத்தனர். அப்போது தான், இந்த பணம் செல்லாது என, அரசு அறிவித்திருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள், வங்கியில் கேட்டபோது, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர முடியாது என கூறினர். இதைக்கேட்டு மூதாட்டி கண்ணீர் விட்டார். போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X