வாலாஜாபேட்டை : ராணிப்பேட்டை அருகே, கடும் பனி மூட்டத்தால், அடுத்தடுத்து ஒன்பது வாகனங்கள் மோதிய விபத்தில், 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு ஏராளமான வாகனங்கள் சென்றன.தென்கடப்பந்தாங்கல் மேம்பாலத்தில், சாலையே தெரியாதபடி, கடும் பனி மூட்டம் இருந்ததால், வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. அப்போது, வேலுாரில் இருந்து சென்னை சென்ற கன்டெய்னர் லாரி, மேம்பால தடுப்புச் சுவர் மீது மோதி கவிழ்ந்தது.கடும் பனியால், இதை கவனிக்காமல், பின்னால் வந்த இரு மினி லாரிகள், கன்டெய்னர் லாரி மீது மோதின. கண்ணிமைக்கும் நேரத்தில், பின்னால் வந்த ஆறு கார்கள், அடுத்தடுத்து மோதி நொறுங்கின.ஒன்பது வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில், வாகனங்களில் இருந்தவர்கள், வெளியே வர முடியாமல், அலறினர்.தகவலறிந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், பொதுமக்கள் உதவியுடன், அவர்களை மீட்டனர். ஒன்பது வாகனங்களில் இருந்த, 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள், வாலாஜாபேட்டை, வேலுார் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.விபத்தால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை சென்ற வாகனங்கள், மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. பொக்லைன் மூலம், விபத்துக்குள்ளான வாகனங்கள் அகற்றப்பட்டன.விபத்து நடந்த சிறிது நேரத்தில், அந்த வழியாக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் சென்றார். அவர், மீட்பு பணிகளை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ரயில்களும் பாதிப்பு
சென்னை - ஜோலார்பேட்டை ரயில் மார்க்கத்திலும், நேற்று கடும் பனி மூட்டம் நிலவியது. பனியால் தண்டவாளத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த வழியாக செல்லும் ரயில்கள், சரக்கு ரயில்களை குறைந்த வேகத்தில் இயக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், 20 பேர் அடங்கிய குழுவினர், தண்டவாளத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE