சென்னை: துக்ளக் வார இதழின் பொன்விழாவை வாழ்த்தி பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோவில், உலகின் தொன்மையான மொழி தமிழ், என புகழாரம் சூட்டியுள்ளார்.
துக்ளக் வார இதழின் 50ம் ஆண்டு நிறைவு விழா (பொன்விழா) சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜன.,14) நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொன்விழா மலரை வெங்கையா நாயுடு வெளியிட, முதல் பிரதியை ரஜினிகாந்த பெற்றார். விழாவில் குருமூர்த்தி பேசியதாவது: தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது. காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடிவதில்லை. முழுமையாக ஹிந்து மாநிலம் எனில் தமிழகம் தான். ஆனால், இங்கு கலாச்சார ரீதியாக ஹிந்துவாக இருந்தாலும், அரசியல் ரீதியாக ஹிந்துக்கள் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே, பொன்விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து செய்தியுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பப்பட்ட வீடியோவில் வணக்கம் எனவும், பொங்கல் வாழ்த்துகள் எனவும் தமிழில் தெரிவித்தார். அவர் பேசுகையில், உலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம். துக்ளக் ஆசிரியராக இருந்த சோ, கருத்துகளை நையாண்டி வடிவில் சொல்வதில் கைதேர்ந்தவர். உண்மை மிக முக்கியம் என நம்பியவர். இவ்வாறு மோடி பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE