பொது செய்தி

தமிழ்நாடு

இன்பம் பொங்கும் திருநாள்!

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
இன்பம் பொங்கும் திருநாள்!

'உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற பாரதியின் வாக்கிற்கு, வடிவம் தரும் நாள், பொங்கல் திருநாள். வேளாண்மையை அடிப்படையாக் கொண்டு வாழ்வாதாரமும், பொருளாதாரமும் அமைந்திருப்பதால், என்றென்றும் உழவுத் தொழிலே தலைசிறந்த தொழிலாக தனிப்பெருஞ்சிறப்புடன் விளங்குகிறது என்கிறார் வள்ளுவர். அனைத்து சங்க இலக்கிய நுால்களிலும், சூரியனுக்கே முதல் மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது.

திருக்குறளில், 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' எனவும், சிலப்பதிகாரத்தில், 'ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்' எனவும் சூரியனுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. உணவளிக்கும் உழவர்களுக்கும், அதற்கு காரணமான சூரியனுக்கும் நன்றி செலுத்தும் நாள், தை திருநாள். அதனாலேயே இந்த நாளை, தேசிய பொங்கல் தினம் என்று கூறுகின்றனர். உழவர் திருநாளாம் தைத்திருநாள் உலகளாவிய ரீதியில் அனைத்து தமிழ் ஹிந்து மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சோழர் காலத்தில், பொங்கல் பண்டிகைக்கு புதியீடு (புதுஇடு) என்று பெயர் இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று பொருள். உழவர்கள், தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.

அது, பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை, அறுவடை செய்து, பயன் அடையும் பருவமே தை மாதம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை, சர்க்கரை, பால், நெய் சேர்த்து, புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழா. நீர் வளம் கொண்ட இடங்களில், மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில், மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மை தான் விளைவிக்க முடியும்.

ஆகவே, மார்கழி அல்லது தை மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவழிக் காய்கறிகள் அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் என பொருள்படும்.


சூரியன் உதிக்கும் வேளை!


பொங்கல் பண்டிகை, நம் மரபில் பண்பாட்டு அடையாளமாக, வாழ்க்கை முறையில் ஆழ வேரூன்றிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நாம் நன்றாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் அடையாளமாக, பொங்கல் கொண்டாட்டங்கள் அமைகின்றன. நம்முடைய வாழ்வில் உழவுத்தொழில் சிறந்து விளங்குகிறது, அதைச் சார்ந்த மற்ற தொழில்களும் சிறந்து விளங்குகின்றன, குடும்பங்களில், ஆடு, மாடுகள் உள்ளிட்ட ஆநிரைச் செல்வங்கள் நிறைந்திருக்கின்றன என்பதையெல்லாம் பறைசாற்றும் திருவிழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்த தைப்பொங்கல் திருநாளில், உழவர்கள் தம் வேளாண்மைக்கு உதவி செய்த சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துகின்றனர்.இதற்காக, அவர்கள் சூரியன் உதிக்கும் வேளையில் பொங்கலிட்டு, நன்றியை வெளிக்காட்டுகின்றனர். உழவர்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதப்பிறவியும் சூரியனுக்கு நன்றி கூறும் நாளாக, இன்றைய நாள் போற்றப்படுகிறது. உழவர்கள் மழையின் உதவியால், ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை, மார்கழியில் வீட்டிற்கு எடுத்து வந்து தம் உழைப்பின் பயனை நுகரத் துவங்கும் நாளே தைப்பொங்கல்.

பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று, அதிகாலையில் எழுந்து, குளித்து, வீட்டில் உள்ள தேவையற்ற, பழைய பொருட்களை வீட்டின் முன், தீயிட்டு கொளுத்துவர். அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப, போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.போகி பண்டிகை, மார்கழி மாதம் முடிந்து, தை மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது.அக்காலத்தில், போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால் என்பதை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்து உள்ளனர்.


பெரும் பொங்கல்!


போகி பண்டிகைக்கு மறு நாள், பொங்கல் பண்டிகை; புது பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையை சுற்றிக் கட்டி, புது பாலில், புது அரிசியிட்டு வெல்லம் உள்ளிட்டவற்றை கலந்து பொங்கலிடுவர். வீட்டுக்கு வெளியே, சூரியன் இருக்கும் திசையை நோக்கி, பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.அரிசி நன்கு சமைத்து, பொங்கி வரும் போது, குலவையிட்டும், 'பொங்கலோ பொங்கல்... பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக...' என்ற குரலோடு, பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால், அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம்.பொங்கல் விழா, மக்களால் இயற்கை முறையில் இயல்பாக கொண்டாடப்படும், ஒரு உண்மையான விழா. உழைக்கும் தமிழ் மக்கள், தம் உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.வரலாற்று ரீதியாக பார்க்குமிடத்து, சங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தனர்.

தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பர். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக, பூமி, சூரியன், மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.இதுவே, நாளடைவில், பொங்கல் திருநாள் கொண்டாட்டமாக மாறியது என்ற வரலாற்று கதை, அனைவர் மத்தியிலும் பிரபலமாக நினைவூட்டப்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாளாக, உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை, தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால், தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை, இரட்டிப்பு சந்தோஷத்துடன், தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம்.

அதேசமயம், பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, வரும் ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
15-ஜன-202004:31:16 IST Report Abuse
vasumathi தினமலர் நிர்வாகம் வாசகர்கள் மற்றும் அனைவருக்கும் இனிய Pongal நல்வாழ்த்துக்கள். தேவையான மழை பெய்து எல்லோரும் சந்தோஷமாக இருக்கட்டும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X