இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: இந்தியாவில் ஏதேனும் தவறு நடந்தால் உரக்க சொல்ல வேண்டியிருக்கும் என மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக இந்தியாவின் நிலைபாடுகள் குறித்து மலேசிய பிரதமர் மகாதீர் முகமது கருத்து தெரிவித்து வந்தார். காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தபோது, 'காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்துள்ளது. எங்களை பொறுத்தவரை, இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்க ஆக்கிரமிப்பு செய்வது சரியான தீர்வல்ல' என கருத்து கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு சார்பில், இந்திய உள்நாட்டு விவகாரங்களில் மலேசிய பிரதமர் தலையிடுவது, கருத்து கூறுவது முறையல்ல, என பதிலளித்தது. இருந்தும் தற்போது, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதையும் விமர்சித்தார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டமானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. இத்தனை ஆண்டுகளாக இந்திய குடிமக்களாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்தில், முஸ்லிம்கள் மட்டும் இந்திய குடிமக்கள் ஆவதிலிருந்து தடுக்கப்படுவது நியாயமில்லை, என கூறியிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில் அதிருப்தி தெரிவித்தது. அதை தொடர்ந்து, தற்போது, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயிலுக்கு இந்திய அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்தது. இது இந்திய வணிகர்களுக்கும், மலேசிய பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்படைய செய்துள்ளது.

இது குறித்தும் மலேசிய பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு அதிகப்படியான பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இந்தியா தற்போது எடுத்த நடவடிக்கையை நினைத்து நிச்சயம் கவலைப்படுகிறோம். இந்தியாவில் ஏதேனும் தவறு நடந்தால் நாங்கள் உரக்க சொல்ல வேண்டியிருக்கும். தவறான விஷயங்களை அனுமதித்து, பணம் குறித்து மட்டுமே சிந்தித்தால், நிறைய தவறான காரியங்கள் செய்யப்படும் என கருதுகிறேன். இவ்வாறு மகாதீர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE