சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

மதுக்கடை மாமூலில் கொழிக்கும் கலால் அதிகாரிகள்!

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மதுக்கடை மாமூலில் கொழிக்கும் கலால் அதிகாரிகள்!

பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். சூடான காபியை பருகியபடியே, பேசத் துவங்கிய அண்ணாச்சி, ''அதிகாரிகளைக் கூப்பிட்டு, பாராட்டியிருக்காரு வே...'' என, விஷயத்திற்கு வந்தார்.

''எந்த ஊருல, யாருங்க பாராட்டுனது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊர் மதுரை... உள்ளாட்சித் தேர்தல்ல, பல இடங்கள்ல பெரிய அளவுல களேபரங்கள் நடந்தாலும், மதுரை மாவட்டத்துல எந்தப் பிரச்னையும் இல்லாம, சுமுகமான தேர்தலை, அதிகாரிகள் நடத்தி முடிச்சுட்டாங்கல்லா... ''அதே மாதிரி, ஓட்டு எண்ணிக்கை, அதுக்கப்புறம் நடந்த மறைமுக தலைவர் தேர்தலும், பெரிய அளவுல பிரச்னைகள் இல்லாம நடந்து முடிஞ்சிட்டு வே... எல்லா இடங்கள்லயும், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் இணைஞ்சு செயல்பட்டிருக்காவ...

''இதனால, உற்சாகமான கலெக்டர் வினய், துறையின் முக்கிய அதிகாரிகளை அழைச்சு, பாராட்டியிருக்காரு... இதுல, அவங்களுக்கும் ரெட்டிப்பு சந்தோஷமாயிட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.

''பாராட்டு சம்பந்தமா என்கிட்டயும் ஒரு தகவல் இருக்கு பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்... ''குப்பைத் தொட்டிகள் பக்கத்துல கோலம் போட்டா, மக்கள், தரையில குப்பை கொட்ட மாட்டாங்கன்னு, கோவை மாநகராட்சியில, முதல் முறையா, குப்பைத் தொட்டி பக்கத்துல, கோலம் போடும் பணியை, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி துவங்கி வச்சாரு பா...

''இந்தத் திட்டத்தை, இப்ப சென்னையிலயும் அமல்படுத்தியிருக்காங்க... ஆனா, இந்தத் திட்டத்தை, ஓர் அதிகாரி கொண்டு வந்ததா நினைச்சு, அவருக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பாராட்டு தெரிவிச்சிருக்கார்... 'உள்ளாட்சித் துறை அமைச்சரா இருந்தவருக்கு, இது கூட தெரியலையே'ன்னு, ஆளுங்கட்சியினர், சமூக வலைதளங்கள்ல கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''வசூலை வாரிக் குவிக்கறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.

''எந்தத் துறையிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''டாஸ்மாக் கடைகள்ல, பீர், பிராந்தி, ரம்னு எல்லா மதுப்பானங்களையும், அரசு நிர்ணயிச்ச விலையை விட, கூடுதல் விலைக்கு தான், ஊழியர்கள் விக்கறா ஓய்... ''இதைத் தடுக்க, அப்பப்ப கடைகள்லயும், பார்கள்லயும் ஆய்வு நடத்தணும்னு, கலால் அதிகாரிகளுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு போட்டிருக்கு... ஆனா, யாரும் ஆய்வுக்கே போறது இல்லை ஓய்...

''உதாரணமா, சென்னை, அடையாறு மண்டலத்துல, 90 மதுக்கடைகள் இருக்கு... இங்கே ஆய்வுக்கு வராம இருக்க, ஒரு கடைக்கு, மாசம், 50 ஆயிரம் ரூபாய் வீதம், கலால் அதிகாரிகள், 'கட்டிங்' வாங்கிடறா ஓய்... இவாளோட, போலீசாரும் சேர்ந்துக்கறா... அவாளும் மாசம், ஒரு தொகையை கப்பமா கறந்துடறா ஓய்... ''இதே மாதிரி, சைதாப்பேட்டை, அண்ணாநகர்னு அதிக வியாபாரம் நடக்கற ஏரியாவுல இருக்கற கடைகள்ல, தலா, ௧ லட்சம் ரூபாய் வரைக்கும் வசூலிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''இன்னைக்கு மதியம், எல்லாரும் என் வீட்டு பொங்கல் விருந்துக்கு வந்துடுங்க... நாயரே நீரும் தான்...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையைக் கட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஜன-202006:02:52 IST Report Abuse
D.Ambujavalli எந்த சட்டம் , விதிகள் வந்தாலும் அமுல்படுத்த வேண்டிய அதிகாரிகளுக்குத்தான் கொண்டாட்டம் எல்லாத் துறையிலும் இந்த விதிகள் காமதேனு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X