சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

வங்கி ஊழியர்கள் போராடுவது நியாயமா?

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வங்கி ஊழியர்கள் போராடுவது நியாயமா?

ஆர்.ஆத்மநாதன், செங்கல்பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஷ்ய புரட்சியின் போது, அரை வயிற்று ரொட்டியுடன் உழைத்தார்களாம், ரஷ்யர்கள்; எஞ்சிய அரை வயிற்றை, தோழர் லெனினின் பேச்சுக்கள் தான் நிரப்புமாம். அவ்வாறு கஷ்டப்பட்டு தான், ரஷ்யாவை வல்லரசு ஆக்கியுள்ளனர்!

இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமென்றால், அதற்கான முனைப்பில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். 'முயல் பிடிக்கும் நாயை, முகத்தைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம்' என முன்னோர் சொல்வர். அந்த விதத்தில், வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியோர் யார், ஏமாற்றுவோர் யார் என்பதை, வங்கி ஊழியர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருப்பர். கோடி கோடியாக கொள்ளையடித்து, ஏப்பம் விட்டு, வெளிநாட்டுக்கு தப்பியோடிய, 'மல்லையா'க்களையும், நிரவ் மோடிகளையும் வளர்த்து விட்டது, இவர்கள் தான்.

சாதாரண துப்புரவு தொழிலாளி வேலைக்கே, பி.இ., - பி.டெக்., படித்தோர் எல்லாம் போட்டி போடும் இக்காலத்தில், மேலும் சம்பளம், சலுகைகளை பெற, வங்கி ஊழியர்கள் போராடுவது, எந்த விதத்தில் நியாயம்? 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய தொழிலாளர் போராட்டத்தில், 25 கோடிப் பணியாளர்கள் பங்கேற்றனர்; அதில், 5 லட்சம் வங்கிப் பணியாளர்களும் அடக்கம். மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் பணியாளர்கள், அரசை எதிர்ப்பதாக கூறி, சம்பளம் தரும் மக்களை அல்லாட வைப்பது, பச்சைத் துரோகம். அதிலும் பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கும், இத் தருணத்தில், வங்கிகளும் சேர்ந்து போராடுவது, கண்டனத்திற்குரியது!

மத்திய, மாநில அரசு பணியாளர்கள், தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்ற வேண்டும். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்!

***


என்னென்ன கொடுமைகளை பார்க்க போகிறோமோ?

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து விட்டது. மாவட்ட தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு, தேர்வு செய்ய உள்ள உறுப்பினர்களை, 'ரிசார்ட்'டுக்கு அழைத்து சென்று, திராவிடக் கட்சிகள் பாதுகாத்து வருவதாக தகவல் கிடைத்திருப்பது சிரிப்பை தான் வரவழைக்கிறது. இப்போது விலை போகும் உறுப்பினர்களும், அவர்களை விலைக்கு வாங்கி தலைவர்களாக வருவோரிடமும், எப்படி துாய்மையான நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்க்க முடியும்?

இந்திய அரசியலில், மஹாராஷ்டிரா உட்பட, சில மாநிலங்களில் குதிரை பேரம் நடத்தி, ஆட்சியில் அமருவதை, தொடர்ந்து பார்த்து வருகிறோம். மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், நடந்த குதிரை பேர அரசியல், ஒட்டுமொத்த இந்திய தேர்தல் முறையை கேலி கூத்தாக்கி விட்டது. 'கொள்கையாவது, மண்ணாங்கட்டியாவது...' என்ற வகையில், சிவசேனாவும், காங்கிரசும் கூட்டணி அமைத்தன. இவர்களுக்கு ஓட்டளித்த, மஹாராஷ்டிரா மக்கள் தான், வெட்கி தலைகுனிய வேண்டும்!

அரசியல்வாதிகளிடம் எப்போது கை நீட்டி காசு வாங்கி, ஓட்டுக்களை விற்று விட்டோமோ, அப்போதே, அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விட்டோம். அது, மஹாராஷ்டிரா மாநிலத்திற்கும் மட்டுமல்ல; தமிழகத்திலும், ஊரக உள்ளாட்சி தலைவர்களை தேர்ந்தெடுப்பதிலும், இதே கதி தான். அன்று, திராவிட கட்சிகளின் தாய்க் கழகமான, தி.க.,வின் தலைவராக இருந்த, ஈ.வெ.ரா., 'தேர்தல் பாதை, திருடர்களின் பாதை' என, தீர்க்கதரிசியாக தமிழக அரசியலை கணித்துள்ளார் என, நினைக்க வைத்து விட்டது. இன்னும் என்னென்ன கொடுமைகளை, தமிழகத்தில் பார்க்கப் போகிறோமோ தெரியவில்லை!

***


ஆந்திராவை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வளர்ச்சி பெறுமா?

கே.மாரியப்பன், கோவையிலிருந்து எழுதுகிறார்: இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு மாநில அரசு, தனக்கு ஓட்டளித்த மக்களின் முன்னேற்றத்திற்காக, எப்படி செயல்பட வேண்டும் என்பதை, ஆந்திரம் உணர்த்தியுள்ளது. முதன்முறையாக இளம் வயதிலேயே முதல்வராகியுள்ள, ஜெகன் மோகன் ரெட்டி, மற்ற மாநில அரசுகளுக்கு துாண்டுகோலாக உள்ளார். அவர் பதவி ஏற்றதும், மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளை குறைக்க, மது அருந்துவோரின் தகுதியை நிரூபிக்கும் வகையில், அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது பற்றி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

அரசு அலுவலகங்களில் பணிபுரியும், கீழ்மட்ட ஊழியர்களின் சம்பளத்தை நியாயமான அளவிற்கு உயர்த்தி உள்ளார். இதுமட்டுமின்றி, பெண்களை சமீபகாலமாக மிகவும் பாதிக்கக்கூடிய பாலியல் வன்கொடுமைகளை, அறவே ஒழிக்க, தவறு செய்தோரை, உடனடியாக தண்டிக்கும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால், 21 நாட்களுக்குள் குற்றவாளிகள் துாக்கிலிடப்படுவர். பொதுமக்களின் வீடுகளுக்கு, ரேஷன் பொருட்கள் நேரடியாக, முறையாக வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு பணிகளுக்கு, துறை வாயிலாக, அரசு தேர்வுகளை நடத்தி, அதில் தேர்வு பெறும் நபர்கள், நேர்முக தேர்வு இல்லாமல் உடனடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இது போன்ற திட்டங்கள் அனைத்தையும், மற்ற மாநிலங்கள் பின்பற்றினால், மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். மற்ற மாநில அரசு முதல்வர்களும், தங்களும் எப்படி சிறப்பாக ஆட்சி நடத்துவது என்பதை, ஜெகன் மோகன் ரெட்டியிடம் கற்றுக் கொள்ள வேண்டும். இவை தான், பொதுமக்களுக்காக பாடுபடும், உண்மையான ஜனநாயக மாநில அரசுகளாக இருக்க முடியும். இந்த திட்டங்களில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்ற பேச்சிற்கே இடம் இல்லை. இதை, ஆந்திராவை போல, மற்ற மாநில அரசுகளும் கடைபிடித்தால், மற்ற நாடுகள் பாராட்டும் அளவிற்கு, ஒரு வளமான நாடாக இந்தியா உருவாக வாய்ப்பு இருக்கிறது!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
15-ஜன-202008:46:50 IST Report Abuse
M. Ashokkumar திருவாளர் ஜெகன் மோகன் அவர்கள் அரசியல் விரோதத்தால் முந்திய அரசு செய்து வந்த பலவேறு கட்டுமான ஒப்பந்தங்களை நிறுத்திவிட்டு மறு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதனால் கோடிக்கணக்கான பணிகள் நின்று போயுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். மணல் எடுக்க தேடி விதிக்க பட்டுள்ளது. அரசாங்க செலவில் ஜெருசலேத்திற்கு குடும்பத்துடன் புண்ணிய யாத்திரை மேற்கொண்டார். அரசு செலவில் தன சொந்த வீட்டை புனரமைக்க முயற்சி செய்தார் . பலிக்க வில்லை. அணைத்து அரசு கட்டிடங்களுக்கும் தன கட்சி வர்ணத்தை பூச செய்துள்ளார். பாலியில் குற்ற வலிகளுக்கு குறைந்த காலத்தில் தண்டனை சட்டம் இயற்றியயது சரிதான் ஆனால் இது நடைமுறை படுத்துவதற்கு இயலாத காரியயம். மொத்தத்தில் அரசாங்கத்திற்கு வருவாய் இல்லாமல் எப்படி இதனை சலுகைகள் வழங்க முடியும் ?. தி. மு. க வினர் எப்படி ரூபாய்க்கு மூணு படி அரிசி என்று கூறிவிட்டு பிறகு மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம். அவர் செய்ய வேண்டியது அரசின் வருவாய் பெருக்கம், வளர்ச்சி , மற்றும் வேலை வாய்ப்பை அதிகரித்தால் தான்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஜன-202006:08:57 IST Report Abuse
D.Ambujavalli ஆந்திரா பாணி தண்டனை அறிவிக்கப்பட்டாலே, பெண்களை வக்கிர பார்வை பார்ப்பவர்கள் நடுங்கி ஓடுவார்கள் இதெற்கெல்லாம் தமிழகம் லாயக்கில்லை ஏனெனில், குற்றவாளிகளில் பெரும்பான்மை தலைவர்களின் வாரிசுகளாக இருப்பார்களே பொள்ளாச்சி போதாதா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X