மனிதக் கழிவை அகற்றுவதால் மரணம்; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனிதக் கழிவை அகற்றுவதால் மரணம்; உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

Added : ஜன 14, 2020

மதுரை : மனிதக் கழிவுகளை அகற்றும்போது, துப்புரவுப் பணியாளர்கள் மரணம் அடைவதைத் தடுக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை யாகப்பா நகர், இருளாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:மனிதக் கழிவுகளை, மனிதர்களே அகற்றுவதை தடை செய்யும் சட்டம், 2013ல் கொண்டு வரப்பட்டது. அதன்பின்னரும், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்வதில் ஈடுபடுத்தப்பட்ட துப்புரவுப் பணியாளர்களில் பலர் இறந்துள்ளனர்.இதில், தமிழகத்தில் இறந்தவர்கள், 45 சதவீதம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதை பின்பற்றுவதில்லை.கேரள அரசு, முதன் முதலாக, சாக்கடைகளை சுத்தம் செய்ய, ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவையில் தனியார் நிறுவனம், 'பயோ டைஜெஸ்டர் செப்டிக் டேங்க்' கண்டுபிடித்துள்ளது. இது, பாக்டீரியாக்களை, 99.9 சதவீதம் கழிவுகளை மட்கச் செய்து, மறு பயன்பாட்டிற்கு உதவும் நீராக, வாயுவாக வெளியேற்றுகிறது.இதை பயன்படுத்தி, மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு விசாரித்து, மத்திய சமூகநீதித் துறை செயலர், தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X