எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

துள்ளிக்கிட்டு வருது ஜல்லிக்கட்டு காளை!

Added : ஜன 15, 2020
Advertisement
ஜல்லிக்கட்டு,காளை,பொங்கல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும், தமிழர் வீர விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள், பல கிராமங்களில் முழுமூச்சில் நடந்து வருகின்றன.

காளை மாட்டை ஓட விட்டு, அதை வீரர்கள் அடக்குவது தான், இந்த விளையாட்டு. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேடு போன்ற ஊர்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது. வரும், 15ல், அவனியாபுரம்; 16ல், பாலமேடு; 17ல், அலங்கநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடாகிஉள்ளது. அதுபோல, திருச்சி மாவட்டத்தில் சூரியூர், ஆவரங்காடு, பொத்தமேட்டுப்பட்டி மற்றும் கருங்குளம் ஆகிய இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் நடந்து வரும் ஜல்லிக்கட்டும் சமீப காலமாக பிரபலமாகி வருகிறது.


பாய்ந்து வரும் காளை:

இங்கெல்லாம், வாடிவாசல் வழியாக காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். மூக்கனாங்கயிறு உட்பட அனைத்து கட்டுகளும் அவிழ்த்து விடப்பட்டு, நீண்ட கொம்புடன் பாய்ந்து வரும் காளையை, களத்தில் நிற்கும் வீரர்கள் மடக்கி பிடிக்க வேண்டும். காளையை பிடிக்கும் வீரருக்கு, பரிசு; பிடிக்காவிட்டால் அந்த காளையை வளர்க்கும் நபருக்கு பரிசு என்பது பொதுவான விதி. சிராவயல் போன்ற இடங்களில், வாடி வாசல் வழியாக இல்லாமல், மொத்தமாக மாடுகள் அவிழ்த்து விடப்படும். ஆங்காங்கே வீரர்கள் மாடுகளை மடக்கி பிடித்துக் கொண்டிருப்பர்.

தமிழகம் முழுவதும் நடந்த, ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்திற்கு பின், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீது அனைவரின் கவனமும் விழுந்துள்ளது. அரசின் ஆதரவும் பெருகியுள்ளது. இதன் காரணமாக, மாடு பிடிக்கும் வீரர்களுக்கு, கடந்த காலத்தில், கட்டில், பீரோ போன்றவை தான் அதிகபட்ச பரிசாக கிடைத்து வந்தது.


அனுமதி:

ஆனால், கடந்த ஆண்டு கார் போன்ற பரிசுப்பொருட்கள் கிடைத்தன. தமிழக சுற்றுலாத் துறை, சென்னை நகர மக்களுக்கு, கிராமிய ஜல்லிக்கட்டு போட்டிகளை காண்பிக்கும் விதமாக, ஜல்லிக்கட்டு சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை நீங்கினாலும், ஆண்டுதோறும் அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள, ஏழு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளித்து, அரசிதழில் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளை, 16ல் துவங்கி, 31க்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டியிலும், 500 முதல், 900 காளைகள் வரை பங்கேற்கும், அலங்கநல்லுார் தான் அதிகபட்ச காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டாகும்.

மருத்துவ சோதனைக்கு பிறகே, ஜல்லிக்கட்டு காளைகள் அனுமதிக்கப்படுகின்றன. அது போல, மாடுபிடி வீரர்களும், சட்ட திட்டத்திற்கு உள்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர்.


அடங்காத காளை:

இந்த ஆண்டு, பரவலாக மழை பெய்து, பூமி செழித்திருப்பதாலும், பொங்கல் பணம் பரிசு போய்ச் சேர்ந்து இருப்பதாலும், பிறந்த ஊர் பாசத்துடன் மக்கள் கிராமங்களுக்கு சென்று இருப்பதாலும், ஜல்லிக்கட்டு நடக்கும் இடங்களில் அடங்காத காளைகளாலும், அடக்கப்போகும், காளைகளாலும்' விழா, களைகட்டப்போவது உறுதி.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X