பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை | Dinamalar

பிளஸ் 2 மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை

Added : ஜன 15, 2020

பாகூர்:பிளஸ் 2 மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர், சூரியா நகரை சேர்ந்தவர் சுந்தரவடிவேலு, 45; வில்லியனுாரில் வண்ண மீன்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அருள்மொழி 42; பாகூரில் செருப்பு கடை மற்றும் அழகு நிலையம் வைத்துள்ளார். இவர்களது மகன் ராம்குமார், 19; மகள், தேவிகா, ௧7; ராம்குமார் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு பிடித்து வருகிறார். தேவிகா வில்லியனுாரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.இதனிடையே, கருத்து வேறுபாடு காரணமாக சுந்தரவடிவேலுவும், அருள்மொழியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால், அருள்மொழியுடன், அவரது மகன் ராம்குமார், மகள் தேவிகா இருவரும் கடையில் இருந்தனர். மாலை 6.00 மணிக்கு, தேவிகா வீட்டிற்கு சென்று லைட் போட்டு விட்டு அங்கேயே இருப்பதாகவும், நீங்கள் கடையை மூடிவிட்டு வாருங்கள் என தனது தாய் அருள்மொழியிடம் கூறி விட்டு சென்றுள்ளார்.அதன்பின், ராம்குமார் தனது நண்பர்களுடன் வீட்டிற்கு சென்றார். அப்போது, கதவு உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் தட்டியும் தேவிகா கதவை திறக்கவில்லை. சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, ஹாலில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் தேவிகா துாக்கில் தொங்குவதை கண்டு கூச்சலிட்டனர்.
பின்னர், பக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று, தேவிகாவை மீட்டு பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு துாக்கி சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் தேவிகா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்த பாகூர் போலீசார் தேவிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அருள்மொழி அளித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிந்து, தேவிகா எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X