இந்தியா

உரிமை மீறல் குழுவின் முன்பு அதிகாரிஆஜர்: தேர்தல் ஆணையர் விவகாரம் சூடுபிடிக்குது

Updated : ஜன 15, 2020 | Added : ஜன 15, 2020
Advertisement
உரிமை மீறல் குழுவின் முன்பு அதிகாரிஆஜர்: தேர்தல் ஆணையர் விவகாரம் சூடுபிடிக்குது

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் நோக்கத்தில், மாநில தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரத்திலும், கவர்னர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்., ஆட்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு தெரியாமல் தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை, சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக ரத்து செய்தார். அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஜூலை மாதத்தில் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு கவர்னர் கிரண்பேடி கொண்டு சென்றார். அகில இந்திய அளவில் விளம்பரம் வெளியிட்டு, தலைமைச் செயலர் தலைமையில் கமிட்டி அமைத்து, தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
உள்துறை அமைச்சக விளக்கத்தின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் நியமனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்த கவர்னர் கிரண்பேடி, உள்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மாநில தேர்தல் ஆணையரை நியமிக்குமாறு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான விளம்பரத்தை உள்ளாட்சித் துறை செயலகம் வெளியிட்டது.
இது, ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.தேர்தல் ஆணையர் நியமனத்தில் சட்டசபையின் மாண்புகள் மீறப்பட்டுள்ளதாக, தலைமைச் செயலர், உள்ளாட்சித் துறை செயலர், இயக்குனர், சார்பு செயலர் ஆகிய நான்கு உயரதிகாரிகள் மீது உரிமை மீறல் புகாரை, சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி கடந்த வாரம் அளித்தார்.இந்த புகாரை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார். ஜெயமூர்த்தி அளித்துள்ள புகார், உரிமை மீறலின் கீழ் வருகிறதா என்பதை விசாரிப்பதற்காக, தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட உள்ளாட்சித் துறை சார்பு செயலர் கிட்டி பலராம், உரிமை மீறல் குழு முன்பு, 14ம் தேதியன்று (நேற்று) ஆஜராக வேண்டும் என, சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் உரிமை மீறல் குழு நேற்று காலை கூடியது. உரிமை மீறல் குழுவின் தலைவரும் துணை சபாநாயகருமான பாலன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், பாஸ்கர், தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் கலந்து கொண்டனர். சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் உள்ளிட்ட அதிகாரிகளும்பங்கேற்றனர்.உரிமை மீறல் குழு முன்பு, ஆவணங்களுடன் கிட்டி பலராம் ஆஜரானார். அவரிடம், உரிமை மீறல் குழுவினர் விரிவாக விசாரணை நடத்தினர். அதற்கான விளக்கங்களை கிட்டி பலராம் அளித்தார். காலை 11:40 மணிக்கு துவங்கிய கூட்டம், மதியம் 12:55 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X