தமிழ்நாடு

மூணு நாள் கொண்டாட்டம்! கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழாபாரம்:பரியத்துடன் இளைஞர்கள் உற்சாகம்

Added : ஜன 15, 2020
Advertisement
 மூணு நாள் கொண்டாட்டம்! கிராமங்களில் களைகட்டிய பொங்கல் விழாபாரம்:பரியத்துடன் இளைஞர்கள் உற்சாகம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கடந்தாண்டு இரு பருவமழைகளும் திருப்தியாக பெய்ததால், விவசாயம் செழிப்படைந்துள்ளது. இதனால், கிராமங்கள் மட்டுமின்றி, நகரிலும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மனமகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதி விவசாயத்துக்கு மட்டுமின்றி, விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் சிறப்பு பெற்றது. விவசாய விளை நிலங்கள் 'லே - அவுட்'களாக மாறினாலும், நெல், கரும்பு, வாழை, பாக்கு, தென்னை, காய்கறி பயிர்கள், தானிய வகைகள் சாகுபடி பரப்புகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.உழவுக்கு காளைகளை பயன்படுத்துவது குறைந்து, நவீன இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தாலும், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பிலும், காங்கேயம் காளைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இதனால், பொள்ளாச்சி பகுதியில் ஆண்டுதோறும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாட படுகிறது. வீடுகளை மட்டுமின்றி, சுற்றுப்பகுதிகளையும், கோவில்களையும் சுத்தப்படுத்தி வெள்ளையடித்து, திருவிழா கொண்டாட்டத்துக்கு தயாராக உள்ளனர்.வீடுகளில், வண்ணக் கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி, பொங்கல் விழாவை வரவேற்றுள்ளனர்.பொங்கல் விழா மூன்று நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பொங்கலை வரவேற்று, ஆவாரம்பூ, பூளைப்பூ, மாவிலை, வேப்பிலை, எருக்க இலை கொண்டு, 'காப்பு' கட்டி, தை முதல் நாளில், சூரிய பொங்கல் வைத்து, இயற்கையையும், இறைவனையும் இன்று வழிபடுகின்றனர். இரண்டாம் நாளான நாளை, விவசாயிகள் கொண்டாடும் மாட்டுப் பொங்கலுக்கு, விவசாயத்தின் முதுகெலும்பான மாடுகளை சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, தெய்வங்களுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, வழிபட விவசாயிகள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்பின், மாடு விரட்டும், தெப்பக்குளம் தாண்டுலும் நடக்கும்.மார்கழி மாதம் முழுவதும், வீட்டு வாசலில் கோலங்களில் வைக்கப்படும் பிள்ளையார்களை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்தும், மலைக்கோவில்களுக்கு சென்று பூ பறிக்கும் விழா, மூன்றாம் நாள் விழாவாக கொண்டாடப்படும்.

விழாவையொட்டி, கிராமங்களிலும், மலைகோவில்களிலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இளைஞர்களிடையே பண்டைய கலாச்சார முறை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், கல்லுாரிகளில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

இந்தாண்டு பொங்கல் விழாவில், மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை உடுத்தி பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மழையால் விவசாயம் செழிப்படைந்துள்ளதால், பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். விவசாயத்தில் வறட்சி நீங்கி மகிழ்ச்சி பொங்கியுள்ளதை, இத்தைத்திருநாள் உணர்த்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X