பொது செய்தி

தமிழ்நாடு

துளிர்விடும் நம்பிக்கை! களத்தில் இறங்கிய உள்ளாட்சி பிரதிநிதிகள்:நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைக்குமா தீர்வு?

Added : ஜன 15, 2020
Advertisement

அன்னுார்:மூன்று ஆண்டுகளுக்கு பின், புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்வமாக களத்தில் இறங்கி பணியாற்ற துவங்கியுள்ளனர். இதனால், கிராமங்களில் உள்ள பல அடிப்படை பிரச்னைகளுக்கு, தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் துளிர்விட்டுள்ளது.க்ஷ

அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில், 189 கிராமங்களில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் அதிக நுாற்பாலைகள் கொண்ட ஒன்றியங்களில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.ஜின்னிங் பேக்டரிகளும் இங்கு தான் அதிகம். பவுண்டரி கிளஸ்டர் துவக்கப்பட்டு, குன்னத்துார், மசக்கவுண்டன் செட்டிபாளையம், பச்சாபாளையம் ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் துவக்கப்பட்டு செயல்படுகின்றன.

வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக லே-அவுட்கள் அமைக்கப்பட்டு, நுற்றுக்கணக்கான வீடுகள் உருவாகி வருகின்றன.அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப, அடிப்படை கட்டமைப்பு வசதி செய்வது சவாலாக உள்ளது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, அன்னுார் ஒன்றியத்தில் பொறுப்பேற்றுள்ள, 21 ஊராட்சி தலைவர்கள், 195 வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய சேர்மன், துணை சேர்மன், மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் அன்னுார் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகள் செய்வதில் ஆர்வமாக களமிறங்கி உள்ளனர்.

ஒன்றிய சேர்மன் அம்பாள் பழனிச்சாமி கூறுகையில், ''அன்னுார் ஒன்றியத்தில் கிராமப்புறத்தில் உள்ள குடிநீர் பிரச்னையை தீர்க்க, தனி குடிநீர் திட்டம் செயல்படுத்த சபாநாயகர் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அதற்கான பணிகள் துவக்கப்படும் என சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.''அதேபோல் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு, ஒன்றிய பொது நிதி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, அரசின் சிறப்பு நிதி ஆகியவற்றை பெற்று பணிகள் மேற்கொள்ள உள்ளோம்,'' என்றார்.

குன்னத்துார் ஊராட்சியில், எரியாத தெருவிளக்குகள், ஊராட்சி தலைவர் கீதா பொறுப்பேற்ற, 48 மணி நேரத்தில் சரி செய்யும் பணி துவங்கி விட்டது. காரே கவுண்டன் பாளையம் ஊராட்சியில், பல மாதங்களாக ஊருக்குள் வராத டவுன்பஸ் வார்டு உறுப்பினர்கள் முயற்சியால், மீண்டும் நேற்று முன்தினம் முதல் வர துவங்கியுள்ளது.

பொகலுார், வடக்கலுார் ஊராட்சிகளில், முடங்கிய விளையாட்டு மைதானம் செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இளைஞர்கள், சிறுவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.பிள்ளையப்பம்பாளையம், காரேகவுண்டன் பாளையம், அல்லப்பாளையம், கணுவக்கரை, காட்டம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ஏற்கனவே ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளை வகித்தவர்களே ஊராட்சி தலைவர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.

எனவே, அவர்களுக்கு ஊராட்சியின் தேவைகள் தெளிவாக தெரியும் என்பதால், குடிநீர், கழிவு நீர் வடிகால், சாலை, தெரு விளக்கு வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் செய்ய முடிவு செய்துள்ளனர்.போகி பண்டிகையான நேற்று, பல ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய அலுவலகத்தில் பி.டி.ஓ., விஜயராணியை சந்தித்து தங்கள் ஊராட்சியின் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

அன்னுார் ஒன்றியத்தில் முக்கிய கோரிக்கையான கூட்டு குடிநீர் திட்டம், கான்கிரீட் சாலைகள், கழிவு நீர் வடிகால், சொந்த இடமும் வீடும் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடு, தெரு விளக்கு, வெளி மாவட்ட, வெளி மாநில தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையிலான அடுக்கு மாடி குடியிருப்பு என, பல கோரிக்கைகள் உள்ளன. இவை நிறைவேற்றப்படும் என்னும் நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

அன்னுாரில் கோர்ட் அமைப்பதற்கான பரிந்துரைகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த தை மாதம் அன்னுார் தாலுகா மக்களுக்கும் வழி பிறக்கும் மாதமாக இருக்கும், என்னும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.வேகமெடுக்கும் பணிகள்!கொங்கு மண்டல மக்களின், 60 ஆண்டு கனவான அத்திக்கடவு திட்டத்திற்கு அன்னுாரில் நீரேற்று நிலையம் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.

அன்னுார், அவிநாசி, மோப்பிரிபாளையம் பேரூராட்சிகளுக்கு குடிநீர் வழங்கும் 241 கோடி ரூபாய் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் முடியும் நிலையில் உள்ளன. அன்னுாரில் மின் மயானம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 2.50 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னுார் தாலுகா கட்டடமும், 70 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டுள்ள, சார் நிலை கருவூலமும் இந்த மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X