பாலாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலாபிஷேகம்

Added : ஜன 15, 2020

திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்க்கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, ராகுகால பூஜை நடந்தது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நலத்திட்ட உதவி வழங்கல்
திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, ஷீரடி சாய்பாபா கோவிலில், பொங்கல் விழாவையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இதில், கோவில் நிர்வாகிகள், கோபால்நாயுடு, சாய் சீனிவாசன் ஆகியோர், ஏழை பள்ளி மாணவ- - மாணவியர், 40 பேருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் புத்தாடை, இனிப்புகள் வழங்கினர்.பின், மாணவர்களின் சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கோ பூஜையும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
வரும் 20ல் கும்பாபிஷேகம்
உத்திரமேரூர்: உத்திரமேரூர் - எண்டத்துார் சாலையில், பழமையான நுாக்கலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில், விநாயகர், பாலமுருகர் மற்றும் நாக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 20ம் தேதி காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர், வரசக்தி விநாயகர் குழுவினர், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
குழந்தை பாதுகாப்பு பயிற்சி முகாம்
உத்திரமேரூர்: குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு மற்றும் சர்வோ டிரஸ்ட் சார்பில், உத்திரமேரூர் அடுத்த சிறுமயிலுாரில், அங்கன்வாடி பணியாளர்களுக்கான, குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.குழந்தைகளை வளர்க்கும் முறை, குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுதல் உள்ளிட்டவை குறித்து, பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
திருப்பாவை பாடியவர்களுக்கு பரிசு
சோமங்கலம்: குன்றத்துார் தாலுகா, சோமங்கலம் கிராமத்தில், 975 ஆண்டுகள் பழமைவாய்ந்த சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், ஆண்டு தோறும், மார்கழி மாதம் முழுவதும், தினமும் காலை, 5:00 மணிக்கு, திருப்பாவையின், 30 பாசுரங்களை, மாணவர்கள் பாடி, சுவாமியை வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டு திருப்பாவை சேவித்தல், நேற்று முடிவுற்றது. இதில் பங்கேற்று, தினமும் திருப்பாவை பாடிய, 52 மாணவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டன.
சுகாதார திருவிழா
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், பொங்கல் பண்டிகையொட்டி, சுகாதார திருவிழா, நேற்று நடந்தது.அச்சிறுப்பாக்கம் சுற்று வட்டார அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், சுற்றுப்புற துாய்மை மற்றும் சுகாதாரம் குறித்து, நாடகங்கள் வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், திடக்கழிவு மேலாண்மை திட்டம், துாய்மை பாரத இயக்கம், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்றவை குறித்தும், மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'ஹூண்டாய்' நிறுவனத்தில் பொங்கல்
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த இருங்காட்டுக்கோட்டையில், 'ஹூண்டாய்' கார் தொழிற்சாலை உள்ளது.இதன் வளாகத்தில் நேற்று, மண் பானையில் பொங்கலிட்டு, பாரம்பரிய முறையில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஹூண்டாய் நிறுவன நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.கிம், உற்பத்தி பிரிவு தலைவர் ஜே.எச்.லீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X