இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசை விட பாஜ., ஆட்சி அமைந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநில மக்களுக்கு ஐந்து மடங்கு அதிகமாக செய்யவில்லை எனில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என டில்லி பிரிவு பாஜ., தலைவர் மனோஜ் திவாரி உறுதியளித்துள்ளார்.
டில்லி யூனியன் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம், பிப்., 22ல் முடிகிறது. இதனையடுத்து வரும், பிப்., 8ல் ஒரே கட்டமாக, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள், பிப்., 11ல் அறிவிக்கப்பட உள்ளன. ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்., ஆகிய பெரிய கட்சிகள் இருந்தாலும், ஆம் ஆத்மி, பாஜ., இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதனால் இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, டில்லி பிரிவு பாஜ., தலைவர் மனோஜ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஐந்தாண்டுகளில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சி) அரசு, பள்ளி, கல்லூரிகள் திறப்பு, பலருக்கு வேலை வழங்கியது போன்றவற்றை செய்தது. ஆனால், பாஜ., ஆட்சி அமைந்தால், அதைவிட 5 மடங்கு அதிகம் நடத்திக் காட்டுவோம். அது நடக்கவில்லை எனில், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என உறுதியளிக்கிறேன். டில்லியின் வளர்ச்சிக்கு என்னிடம் ஒரு பார்வை உள்ளது. நாங்கள் ஒவ்வொரு வீட்டிலும் தூய்மையான குழாய் நீர் வழங்குவோம். காற்று மாசுபாட்டை 70 சதவீதம் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.

5000 புதிய மின்சார பேருந்துகளை கொண்டு வருவதற்கும், சி.என்.ஜி பேருந்துகளுடன் டில்லியில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். டில்லியில் மூடப்படும் மருத்துவமனைகளை நாங்கள் தடுப்போம். மருந்தகங்கள் இடிந்து கிடக்கின்றன. யமுனா ஆற்றில் ஆற்றங்கரை கட்டப்படும். சேரி பகுதியில் இருக்கும் ஏழைகளுக்கு வீடுத் திட்டத்தின் கீழ் இரண்டு அறைகள் கொண்ட வீடு கட்டித்தரப்படும். அவர்களுக்கு எரிவாயு, நீர் இணைப்பு மற்றும் கழிப்பறைகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படுவதால் ஏழை மக்கள் கூட சிறந்த வாழ்க்கை வாழ முடியும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE