புதுடில்லி: உன்னாவ் சிறுமி பலாத்கார வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பா.ஜ.,விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., குல்தீப் சென்கார், டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை கேட்டு வந்த 17 வயது சிறுமியை 2017ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக நான்கு முறை எம்.எல்.ஏ.வான குல்தீப் சிங் சென்கார் உள்ளிட்டோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த பெண் சமீபத்தில் காரில் பயணம் செய்தபோது ஒரு டிரக் மோதி, அவருடன் பயணித்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; சிறுமி பலத்த காயமடைந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதினார். அதையடுத்து அந்தப் பெண்ணுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பு அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் அது தொடர்பான மேலும் நான்கு வழக்குகளை டில்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 45 நாட்களுக்குள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து பா.ஜ.வில் இருந்து சென்கார் நீக்கப்பட்டார்.
வழக்கை விசாரித்த டில்லி மாவட்ட நீதிமன்றம் 'பாலியல் பலாத்கார வழக்கில் ' போக்சோ எனப்படும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் சென்கார் குற்றவாளி' என அறிவித்து, ஆயுள் தண்டனையும், ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் ஆயுள் தண்டனையை எதிர்த்து, குல்தீப் சென்கார் டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE