பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஜன 15, 2020
Share
பேச்சு, பேட்டி, அறிக்கை

'பஜனை மடத்தில், சிங்கத்திற்கு என்ன வேலை என கருதி, விரட்டி அடிக்கப்பட வாய்ப்புள்ளது; கவனமாக இருங்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பாலபாரதி பேச்சு: பார்லிமென்டில், பா.ஜ., - எம்.பி.,க்கள் அமர்ந்திருப்பதைப் பார்க்கும் போது, பார்லிமென்ட் கூட்டம் போல தெரிவதில்லை; பஜனை கூட்டம் போலத் தான் தெரிகிறது. ஆனால், அவர்கள் மத்தியில், நம், எம்.பி.,க்கள், சிங்கம் போல கர்ஜிக்கின்றனர்.

'பா.ஜ.,வுக்கு தலைவர் இருக்கிறார்; கம்யூ.,க்களுக்கு கூட, பொதுச் செயலர் இருக்கிறார். உங்கள் கட்சிக்கு ஏன் இன்னும் தலைவர் இல்லை என்ற கேள்விக்கு, மத்திய அரசு நிறுவனங்களை கைகாட்டுவது சரிதானா...' என, கிடுக்கிப் போடும் வகையில், காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது தலைவராக சோனியா உள்ளார்; தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ அவர் உள்ளார். நிரந்தர தலைவர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்; அது, விரைவில் நடக்கும். ஆனால், மத்திய அரசின் பல நிறுவனங்களுக்கு, தலைவர்களே கிடையாது.

'இசைத் திறமையால் உங்கள் வறுமையை வென்று விட்டீர்கள்; சபாஷ்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், பிரபல இசையமைப்பாளர் தேவா பேட்டி: 'புல் மீல்ஸ்' என சொல்கின்றனரே, சாதம், சாம்பார், ரசம், கூட்டுகள், வடை, அப்பளம், பாயசம் போன்ற உணவுகள் அடங்கியதை, 30 வயதுக்கு மேல் தான் சாப்பிட்டேன். அறுசுவை உணவு என்பரே, அதை, 40 வயதில் தான் சாப்பிட்டேன். காரணம், வறுமை.

'இப்படி, பச்சைப் பொய்யை, எப்படி வாய் கூசாமல் சொல்ல முடிகிறது, உங்களைப் போன்றவர்களால்...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் பேச்சு: குடியுரிமை திருத்த சட்டம், இந்திய குடிமகனின் குடியுரிமையை, ஒரு குமாஸ்தா நிர்ணயம் செய்யும் நிலையை ஏற்படுத்தும். பணம் இருப்பவன் குடியுரிமை பெறுவான். பணம் இல்லாத ஏழைகள், நடுத்தெருவில் நிற்பர். குடியுரிமை இல்லாதவர்களுக்கு, ஓட்டுரிமை பறிக்கப்படும்.

'தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு, நன்கு உறைக்கும் வகையில், சத்தமாக சொல்லுங்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இலங்கை வடக்கு பிராந்தியத்தின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் பேட்டி: இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும், இலங்கைக்கு திரும்ப வேண்டும். ஏனெனில், இலங்கையில், தமிழர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழர்களின் நிலங்களை, சிங்கள மக்களுக்கு, இலங்கை அரசு வழங்கி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X