திமுக - காங்., உச்சகட்ட மோதல்: துரைமுருகன் நையாண்டியால் அதிர்ச்சி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக - காங்., உச்சகட்ட மோதல்: துரைமுருகன் நையாண்டியால் அதிர்ச்சி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (20+ 195)
DMK, Congress, உச்சகட்ட_மோதல், துரைமுருகன், நையாண்டி, அதிர்ச்சி

வேலுார்: ''கூட்டணியில் இருந்து காங்., விலகினாலும் கவலையில்லை; ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது'' என தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு சரியான ஒதுக்கீட்டை மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் வழங்கவில்லை. பல இடங்களில் காங்கிரஸ் தனியாகவும் தி.மு.க., தனியாகவும் போட்டியிட்ட காட்சிகளும் அரங்கேறின.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் 'சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது. ஒரு ஊராட்சி தலைவர் துணை தலைவர் பதவி கூட காங்கிரசிற்கு வழங்கப்படவில்லை' என அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும் உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த மறைமுக தேர்தலில் காங். கவுன்சிலர்கள் பலர் தி.மு.க. சார்பில் நின்ற தலைவர் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்காமல் எதிர் முகாமான அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்து அக்கட்சியினரை வெற்றி பெற வைத்தனர்.

இது தி.மு.க. தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்தது. இந்தச் சூழலில் பொங்கலையொட்டி தி.மு.க. தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி வேலுார் காட்பாடியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் பங்கேற்றார்.

பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., கூட்டணியில் இருந்து காங். விலகினாலும் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு ஓட்டே கிடையாது. எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். தற்போது வரை தி.மு.க. கூட்டணியில் தான் காங். உள்ளது; பிரியவில்லை. தி.மு.க. கூட்டணியில் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. வெளியே போ என சொல்வதில்லை. அவர்களே போனாலும் ஒப்பாரி வைப்பதில்லை.

எங்கள் கூட்டணியில் உள்ளவர்களை மரியாதையாகவே நடத்துவோம். கூட்டணி தர்மத்தை கடைபிடித்து வருகிறோம். நடிகர் ரஜினி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருத்தை கூறுகிறார். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். துரைமுருகன் நையாண்டியால் தி.மு.க. - காங். கூட்டணி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.


முன்பே ஞானம் வராதது ஏன்?

துரைமுருகன் பேச்சுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக 'வேலுார் பார்லிமென்ட் இடைத்தேர்தலுக்கு முன் உங்களுக்கு இந்த ஞானம் ஏன் வரவில்லை' என டுவிட்டர் சமூக வலைதள பக்கத்தில் கார்த்தி பதிவிட்டுள்ளார். துரைமுருகனின் பேச்சு குறித்த வீடியோவை தன் கருத்துடன் இணைத்து அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X