பொது செய்தி

தமிழ்நாடு

'தில்' காட்டிய வீரர்கள்... திணறடித்த காளைகள்...

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 15, 2020 | கருத்துகள் (1+ 7)
Advertisement
அவனியாபுரம், ஜல்லிக்கட்டு,திணறடித்த, காளைகள், பரிசு

அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷ காளைகளை எதிர்கொண்டு அடக்கிய 'தில்' வீரர்களும், 'வெறித்தனம்' காட்டி வீரர்களை திணறடித்த காளைகளுக்கும் நடந்த போட்டியில் 66 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டுக்காக அவனியாபுரம் - திருப்பரங்குன்றம் ரோடு குருநாதசுவாமி அங்காள பரமேஸ்வரி கோயில் முன் தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டது. குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் வீரர்கள் உறுதி மொழியேற்றனர்.

காலை 8:00 மணிக்கு மூன்று கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள் பிடிக்கவில்லை. இதன் பின் ஒரு மணி நேரத்திற்கு 75 பேர் வீதம் 9 சுற்றுகளில் வீரர்கள் களம் இறங்கி காளைகளை அடக்கினர். 733 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. 641 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷத்துடன் பாய்ந்த காளைகளின் திமிலை தாவிப் பிடித்து அடக்கி வீரர்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். வீரர்களிடம் சிக்காமல் அவர்களை திணறடித்து போக்கு காட்டி பிடிகொடுக்காமல் காளைகள் சீறிப்பாய்ந்தன.

பல காளைகள் களத்தில் நின்று வீரர்களை சுற்றில் விட்டன. காளையிடமிருந்து தப்பிக்க கேலரி தடுப்புகளில் காளையர்கள் ஏறி நின்றனர். பிடிபடாத காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வாடிவாசலை மறைத்து வீரர்கள் நின்றதால் காளைகள் வெளியேற தாமதமாகின. விதிகளை மீறிய வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

முதல் சுற்றில் குறைந்தபட்சம் இரண்டு காளைகளை அடக்கிய வீரர்கள், அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். 607 பேர் பங்கேற்றனர். தங்கம், வெள்ளி காசுகள், சைக்கிள், பீரோ, சில்வர் அண்டா, குடம், குக்கர் பரிசாக வழங்கப்பட்டது.

காளையை ஒருவருக்கும் மேல் பிடித்ததால் பல காளைகள் 'பிடிபடவில்லை' என அறிவிக்கப்பட்டது. அதுபோல் வாடிவாசலை விட்டு வெளியேற மறுத்த காளைகளுக்கும் பரிசு மறுக்கப்பட்டது. மாலை 4:30 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டில் 66 பேர் காயமடைந்தனர். மருத்துவ இணை இயக்குனர் சுரேஷ் கிறிஸ்டோபர் தலைமையில் 20 டாக்டர்கள் குழுக்கள் சிகிச்சை அளித்தன. பலத்த காயமடைந்த 9 பேர் மதுரை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


பரிசாக கார் வழங்க முடிவு


அமைச்சர் உதயகுமார் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் சிறப்பு பெறும் ஒரு வீரர், ஒரு காளையின் உரிமையாளருக்கு முதல்வர், துணை முதல்வர் கார் பரிசாக வழங்குகின்றனர். அதுபோல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும், காளை மற்றும் வீரருக்கும் பரிசு வழங்குவது குறித்து அவர்களிடம் கோரிக்கை வைக்கப்படும், என்றார்.


டோக்கனில் குழப்பம்


திருப்பரங்குன்றம் தி.மு.க., எம்.எல்.ஏ., சரவணன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு அரசியல் தலையீடு இன்றி நடப்பது மகிழ்ச்சி. 150 காளைக்கு வழங்கப்பட்ட சிறப்பு டோக்கன்களில் ஒரே வரிசை எண் இருந்ததால் குளறுபடி ஏற்பட்டு போலீசார் லேசான தடியடி நடத்தியுள்ளனர். இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், என்றார்.


களம் காண வராத 118 வீரர்கள்


* வாடிவாசலுக்கு பின் பகுதியில் காளைகள் வரிசையாக நிற்க வைத்து கொண்டு செல்லும் வகையில் நீண்ட தடுப்புகள் அமைக்கப்பட்டன.

* மாநகராட்சி சார்பில் காளைகளுக்காக 22 இடங்களில் தண்ணீர் தொட்டிகள், தீவனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

* காளைகளின் உரிமையாளர்களுக்கு அவனியாபுரம் மக்கள் சார்பில் இலவச உணவு வசதி செய்யப்பட்டது.

* ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் வீரர்கள் பாதுகாப்பிற்காக தேங்காய் நார் பரப்பப்பட்டது. களத்திலேயே குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டது.

* மேடைக்கு அடுத்தடுத்து கட்சி பிரமுகர்கள், வி.ஐ.பி.,க்கள் வந்தனர். அவர்களை சிலநிமிடங்கள் மட்டும் பார்வையிட வைத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

* கட்சி பதவிகளில் உள்ள காளை உரிமையாளர்களின் பெயர்களை விழா குழு அறிவிக்கும் போது அவர்களின் பதவிகளை குறிப்பிடவில்லை.

* விலங்குகள் நலவாரிய அதிகாரிகள், விலங்குகள் நல ஆர்வலர்கள் காளைகளை வீரர்கள்துன்புறுத்துகிறார்களா என வீடியோவில் பதிவு செய்தனர்.

* ஒவ்வொரு சுற்றிலும் வெவ்வேறு கலர் சீருடை அணிந்து வீரர்கள் களம் இறங்கினர்.

* பதிவு செய்த 118 வீரர்கள் பங்கேற்கவில்லை. 5 பேர் மது அருந்தியிருந்ததால் அனுமதிக்கப் படவில்லை.

* உள்ளூர் காளைகள் விழா துவக்கத்தில் பங்கேற்காமல் இருந்தன. ஆனால் அடுத்தடுத்த பேச்சு வார்த்தைக்கு பின் 150 காளைகள் பங்கேற்றன.


14 காளைகளை அடக்கிய வீரர்!


மதுரை ஜெய்ஹிந்துபுரம் விஜய் 14 காளைகளை அடக்கி சிறந்த வீரருக்கான முதல் பரிசு வென்றார். அடுத்து விளாங்குடி பரத்குமார் 13 காளைகளை அடக்கி 2ம் பரிசும், முத்துப்பட்டி திருநாவுக்கரசு 10 காளைகளை அடக்கி 3ம் பரிசு வென்றனர்.


9 நிமிடங்கள் தெறிக்கவிட்ட காளை!


சிறந்த காளைகளுக்கான முதல் பரிசுக்கு புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளை தேர்வு செய்யப்பட்டது. இக்காளை 9 நிமிடங்கள் வரை களத்தின் நின்று விளையாடி பிடிபடாமல் சென்றது. 2ம் பரிசு வில்லாபுரம் கார்த்திக்கின் காளையும், 3ம் பரிசு எம்.பி. ஆம்புலன்ஸ் சார்பில் களம் இறங்கிய காளைக்கும் வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1+ 7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஜன-202018:33:34 IST Report Abuse
ஆரூர் ரங் போராடி பெருமையை மீட்டெடுத்தோம் என்பது கப்சா. இப்போ தமிழர்களின் மூன்றாம் சாய்ஸ் ஜல்லிக்கட்டு இரண்டாம் சாய்ஸ் கிரிக்கட்டு . ஆனா முதல் விருப்பமென்னவோ தலப்பாக்கட்டுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X