கோலாலம்பூர்: '' மலேசிய பாமாயிலை இந்தியா புறக்கணிப்பது கவலை அளித்தாலும் தவறுகளை சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்'' என மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மகாதிர் இந்தியா, சவூதி அரேபியா நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறார். காஷ்மீரில் 370வது சட்டப் பிரிவு நீக்கப்பட்ட போது 'காஷ்மீர் மீது இந்தியா போர் தொடுத்துள்ளது' என்றார். அடுத்து குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும்போது 'இந்தியா முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறது' என்றார்.
அவர் பேச்சுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை குறைக்குமாறு வர்த்தகர்களுக்கு அதிகாரபூர்வமற்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.
மலேசியாவின் பாமாயில் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியா மலேசியாவில் இருந்து ஆண்டுக்கு 44 லட்சம் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது.இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைத்ததால் இந்தாண்டு மலேசியாவின் பாமாயில் இறக்குமதி 10 லட்சம் டன் அளவிற்கே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மகாதிர் முகமது கூறியதாவது:
மலேசியாவின் பாமாயில் இறக்குமதியை இந்தியா புறக்கணித்திருப்பது கவலை அளிக்கிறது. அதேசமயம் தவறு நடந்தால் அதை நான் சுட்டிக் காட்ட தயங்க மாட்டேன். பணத்திற்காக தவறை கண்டுகொள்ளாமல் இருந்தால் அது ஏராளமான தவறுகள் புரிய வழிவகுத்து விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே இந்தியாவின் பாமாயில் இறக்குமதி குறைந்ததால் கவலை அடைந்துள்ள மலேசிய வர்த்தகர்கள் இரு தரப்பு பேச்சுக்கு ஏற்பாடு செய்யுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE