ஐ.எஸ்., வலையில் கிறிஸ்தவ பெண்கள்: கேரள கத்தோலிக்க திருச்சபை புகார்| Dinamalar

ஐ.எஸ்., வலையில் கிறிஸ்தவ பெண்கள்: கேரள கத்தோலிக்க திருச்சபை புகார்

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (64)
ISIS,christian,womens,Kerala,கேரளா,ஐஎஸ்,கிறிஸ்தவர்,பெண்கள்,புகார்

இந்த செய்தியை கேட்க

கொச்சி: ஐ.எஸ். அமைப்பினர் கிறிஸ்தவ பெண்களிடம் காதல் நாடகமாடி பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துவதாக கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமை அமைப்பான சைரோ-மலபார் தேவாலயம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது குறித்து இதன் ஊடக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கேரளாவில் கிறிஸ்தவ பெண்களிடம் ஐ.எஸ். அமைப்பினர் 'லவ் ஜிகாத்' என்ற பெயரில் காதல் நாடகமாடி மதம் மாற்றி ஐ.எஸ். அமைப்பில் சேர்ப்பது அதிகரித்துள்ளது. இது கேரளாவின் சமூக மற்றும் மத நல்லிணக்கத்திற்கு மிகவும் ஆபத்தானது. பலமுறை 'லவ் ஜிகாத்' மூலம் கிறிஸ்தவ பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கேரளாவில் திட்டமிட்டு கிறிஸ்தவ பெண்களை இலக்காக வைத்து இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. போலீஸ் அறிக்கையின்படி கேரளாவில் 21 பேர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளனர். இதில் பாதிபேர் கிறிஸ்தவர்கள். அவர்கள் முஸ்லிமாக மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம் அதிகாரபூர்வமற்ற தகவல்படி லவ் ஜிகாத் பெயரில் ஏராளமான பெண்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள அரசு உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்களை மதம் மாற்றி பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை 'பீப்பிள்ஸ் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பு மறுத்துள்ளது. 'கேரளாவில் லவ் ஜிகாத் வழக்கு எதுவும் இல்லை' என போலீசார் மாநில உயர்நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ள நிலையில் தேவாலயம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் இந்துக்கள் இணைந்து போராடி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்பவே உதவும். எனவே தேவாலயம் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும்' என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே ''கேரளாவில் லவ் ஜிகாத் நடப்பது உண்மை தான்'' என அம்மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.ஜே.ஆர்.குமார் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே பலமுறை இப்பிரச்னை குறித்து கூறியபோது யாரும் காது கொடுத்து கேட்காத நிலையில் தற்போது தேவாலயம் குரல் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X