பொது செய்தி

இந்தியா

கோமாதா எங்கள் குலமாதா.. குலமாதர் நலம் காக்கும் குணமாதா

Added : ஜன 16, 2020
Share
Advertisement
மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்கொட்டிலில் 'கோடி'' கொட்டிலுக்கு வடமொழியில் 'கோஷ்டம்' என்று பெயர். 'கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான ஸ்தலம் வேறில்லை' என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜபித்தால், அதன் சக்தி கோடி மடங்காக பெருகும். மந்திரப்பாட்டு:சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம் உபநிஷதம்
கோமாதா எங்கள் குலமாதா.. குலமாதர் நலம் காக்கும் குணமாதா


மாட்டுப்பொங்கல் ஸ்பெஷல்
கொட்டிலில் 'கோடி''

கொட்டிலுக்கு வடமொழியில் 'கோஷ்டம்' என்று பெயர். 'கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான ஸ்தலம் வேறில்லை' என்கிறது சாஸ்திரம். அங்கு மந்திரம் ஜபித்தால், அதன் சக்தி கோடி மடங்காக பெருகும்.


மந்திரப்பாட்டு:

சிவபெருமானே பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சொல்லியுள்ள விபரம் உபநிஷதம் ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. சிவனுக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்தால் சகல சவுபாக்கியமும் உண்டாகும் என்று காரண ஆகமம் கூறுகிறது. கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இதை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனென்றால் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.


கீரை கொடுத்தா கல்யாணம்

ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து நீச்சமாக இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்னைகள் உண்டாகும். முற்பிறவியில் பசு சாபம் இருப்பவருக்கு இந்த தோஷம் ஏற்படுவதுண்டு. இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் பசுக்களுக்கு அகத்திக்கீரை, புல், பழங்கள் கொடுப்பதன் மூலம் தோஷம் நீங்கி சாப நிவர்த்தி பெறலாம். அப்போது 'கோக்ராஸ ஸ்லோகம்' என்னும் பசுவுக்குரிய ஸ்லோகத்தைச் சொல்வது நல்லது. இதன் பொருளைச் சொன்னாலும் புண்ணியமே!

'' ஸௌரபேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதி க்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ் த்ரைலோக்கய மாதா:!

“காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே! பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக!” என்பது இதன் பொருள். பின்னர் பசுவை மூன்று முறை வலம் வந்து,

'' கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத் தஸ்மாச் சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!!

என்று சொல்ல வேண்டும். “பசுத்தாயே! உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த பூலோகத்திலும், பர லோகத்திலும் எனக்கு மங்களத்தை அருள்செய்வாயாக'' என்பது இதன் பொருள்.


காஞ்சி பெரியவரின் பிரார்த்தனை:

அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவங்கள் கூட நீங்கி விடும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது. ஆனால், பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 'எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெற்றுத் திகழும்' என சியவன மகரிஷி ஸ்லோகம் ஒன்றில் சொல்லியுள்ளார். 'அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரியட்டும்' என காஞ்சிப்பெரியவர் கூறியுள்ளார்.


பெண்களே.... மனசு வையுங்க!

பால் கொடுக்கும் கறவை காலத்தில் பசுவுக்கு நேரத்திற்கு சரியாக புல், புண்ணாக்கு, தவிடு என ஆகாரம் அளிப்பர். வயதாகி கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பெரும் பாவம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. பெண்கள் நினைத்தால் பசுவைப் பாதுகாக்க முடியும். தினமும் வீட்டில் சமைக்கும் போது காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளைச் சேகரித்து பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். வீடுகளில் இதனைச் சேகரிக்கும் பணியில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் பலன் எளிதில் கிடைக்கும். இதன் மூலம் கோபால கிருஷ்ணனின் அருளால் வளமான வாழ்வு பெறலாம்.


மரம் போல மாடும் இருக்கணும்!

பசுவின் சாணத்தை கோமயம் என்பர். பொதுவாக மிருகங்களின் மலத்தால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக விளங்குகிறது. அந்தக் காலத்தில் வீடு முழுவதும் வீட்டில் தரையை மெழுகுவர். வாசல் தெளிப்பதற்கும் சாணம் கரைத்த தண்ணீரையே தெளிப்பர். இதன் மூலம் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் அந்த வீட்டிற்கு சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் என்பது போல பசுமாடு ஒன்றும் இருப்பது அவசியம்.


நிறத்துக்கு ஏற்ப குணமிருக்கு!

பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப ஒவ்வொரு குணம் இருப்பதாக தேன்விருந்து என்னும் நுாலில் வாரியார் குறிப்பிடுகிறார். தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது. வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா எனக் குறிப்பிடுவர். கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால் மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும். கன்று ஈன்ற பசுவின் பாலை மட்டும் 16 நாட்களுக்கு குடிக்கக் கூடாது.

பாலுக்கு இல்லை விரதம்: சத்வம், ராஜஸம், தாமசம் என்ற மூன்று குணங்கள் மனிதனிடம் உள்ளன. மனத்தெளிவு, சாந்தம், அன்பு, அமைதி ஆகியவை சத்வகுணம். பரபரப்பு, ஆசை, கோபத்தை வெளிப்படுத்துவது ராஜஸ குணம். உற்சாகம் இன்றி எப்போதும் துாங்கி வழியும் நிலை, மந்த புத்தியாக இருப்பது தாமச குணம். இதில் சத்வம் நல்ல குணம், மற்ற இரண்டும் தீய குணம்.

நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட பசும்பால் குடிக்கலாம் என சாஸ்திரம் அனுமதிக்கிறது. ஏனென்றால், அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப் பெறுகின்றன. அதனால், தான் விரதமிருப்பவர்களுக்கு பால் ஒரு திவ்ய உணவாக இருக்கிறது.


பார்த்தால் பலன்:

காலையில் எழுந்ததும் பசுவை பார்த்தால் நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால் வெற்றி கிடைக்கும். பசுவைப் பார்த்தாலே பாவம் தீரும்.


ஒரே நிமிடத்தில்...

நாடு முழுவதும் புனிதமான கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றை தரிசிக்க நம் வாழ்நாள் போதாது. புனித நதிகள், கடல்களும் நிறைய உண்டு. இவற்றில் நீராடவும் நமக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் இந்த புண்ணிய பலனை எளிதாக அடைய ஒரே வழி பசுவை வணங்குவது தான். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன. பசுவை வலம் வந்து வணங்கினால் உலகை சுற்றி வந்த புண்ணியம் ஒரே நிமிடத்தில் கிடைத்து விடும்.


தங்கச்சி பசு

லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளுக்கு 'கோமாதா' என்று பெயர் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்பாளின் பெயரே 'கோ'மதி அல்லது 'ஆ'வுடை என உள்ளது. 'கோ' என்றாலும், 'ஆ' என்றாலும் 'பசு' என்று பொருள்படும் அம்பிகையின் சகோதரரான மகாவிஷ்ணு பூலோகத்திற்கு வந்து பசு வடிவில் இருந்த தங்கையைப் பாதுகாத்து சிவனுக்கு திருமணம் செய்து வைத்ததாக சொல்வர்.


பசுவை பூஜிப்பது ஏன்

தாய் நமக்கு பிறவியைக் கொடுத்தவள். அவளுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பது போல இன்னும் ஒரு அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். உயிரோடு இருக்கும் வரை பால் கொடுத்து உதவும் பசு தான் அது. அன்பும், சாந்தமும் கொண்ட பசுவைக் கண்டால் நம் தாய் போல அன்பும், கருணையும் மனதில் ஊற்றெடுக்கும். வாயில்லா ஜீவனாக இருந்தாலும் மற்ற பிராணிக்கு இல்லாத சிறப்பாக பசு மட்டுமே 'அம்மா' என அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பும். குழந்தையாக இருந்த போது மட்டுமே தாய் பாலுாட்டுகிறாள். ஆனால் பசுவோ நம் வாழ்நாள் முழுக்க பால் தருகிறது, பசுவின் குளம்படி பட்ட புழுதியை 'கோதுாளி' என்பர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது புழுதிப்படலம் கிளம்பும். அது நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும். புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும். மாடுகளுக்கு கீரை கொடுக்கும் பழக்கம் இப்போது அதிகரித்திருக்கிறது.

சிவபெருமானை 'அபிஷேகப் பிரியர்' என்பர். ருத்ர சமகம் என்னும் மந்திரம் ஜபித்து, பசுவின் கொம்பு வழியாக சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். இதில் பால் மட்டுமின்றி 'பஞ்ச கவ்யம்' என்னும் பால், தயிர், நெய், பசு மூத்திரம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை தினமும் நடத்தப்படுகிறது. நாடு செழிக்க பசுக்களை நேசிப்போம்.


பாதத்தை சுவைக்கும் பசு:

திருமால் கிருஷ்ணாவதாரம் எடுத்த போது, பிருந்தாவனத்தில் பசுக்களை மேய்த்தும், குழலுாதியும் லீலைகள் செய்ததாக பாகவத புராணம் கூறுகிறது. அவரது குழலோசை கேட்டு பசுக்கள் தங்களை மறந்து நின்றன. குழலுாதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை ஒன்றும் விளங்கும். அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும். இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும். இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றிக் கொள்வதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X