போடி, முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் பிறந்த நாளை முன்னிட்டு, போடி அருகே பாலார்பட்டி கிராமத்து பெண்கள் விரதம் இருந்து பொங்கலிட்டு வழிபட்டனர். தேனி, திண்டுக்கல்,மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. இதனை கட்டிய ஆங்கிலேயே பொறியாளர் பென்னிகுவிக்கை, தேனி மாவட்ட மக்கள் வழிபட்டு வருகின்றனர். தங்கள் குழந்தைகளுக்கு பென்னிகுவிக், அவரது குழந்தைகள் பெயரையே சூட்டி நன்றி கடனை செலுத்தி விழா கொண்டாடி வருகின்றனர்.பென்னிகுவிக் 1841 ம் ஆண்டு ஜன., 15ல் பிறந்தார். இவரது பிறந்த நாளும் பொங்கலும் ஒரேநாளில் வருவது பெருமைப்பட கூடிய விஷயமாக கருதுகின்றனர். போடி அருகே பாலார்பட்டி கிராம மக்கள் தைப் பொங்கல் விழாவை பென்னிகுவிக்கிற்கு நினைவு பொங்கல் விழாவாக, அவரை வழிபடுவதை ஆண்டுதோறும் செய்து வருகின்றனர்.நேற்று காலை பாலார்பட்டி வந்த திரைப்பட கலைஞர்கள் ஜோ.மல்லுாரி, ஸ்டாலின்முத்து, சுருளிப்பட்டிசிவாஜியை கிராம மக்கள், விவசாயிகள் சங்கத்தினர் சந்தித்து தேவராட்டம், சிலம்பாட்டத்துடன் வரவேற்றனர். பொங்கல் பானைகளுடன் பெண்கள் ஊர்வலமாக பென்னிகுவிக் நினைவு மண்டபத்திற்கு வந்து அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர். நெற்கதிர்கள், பொங்கல், வாழைப்பழம், தேங்காய் உடைத்து பொங்கல் வைத்து வழிபட்டனர்.கிராமத்தை சேர்ந்த கர்னல் பென்னிகுவிக் எழுச்சி பேரவை தலைவர் ஓ. ஆண்டி கூறியதாவது: ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்க கூடிய முல்லை பெரியாறு அணையை பல சோதனைகளை கடந்து பென்னிகுவிக் கட்டினர். இந்த அணை இல்லாவிட்டால், இந்த பகுதி மட்டுமின்றி ஐந்து மாவட்டமும் ஆண்டு முழுவதும் வறட்சியாக இருந்திருக்கும். அவரது பிறந்த நாளான தை திருநாளில் நாங்கள் வணங்கும் மனித கடவுளாக போற்றி அவரது படத்திற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து வழிபடுகிறோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE