பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளலூர் வரை கோவை 'மெட்ரோ' ரயில்! சாத்தியக்கூறு குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை:கோவையில், 'மெட்ரோ' ரயில் திட்டத்தை, வெள்ளலுார் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

கோவையில், 'மெட்ரோ' ரயில் திட்டம் செயல்படுத்த, சென்னை மெட்ரோ நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது.உக்கடம் - கணியூர், உக்கடம் - பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளீச்சி, தடாகம் ரோடு மற்றும் தண்ணீர் பந்தல் முதல் கருமத்தம்பட்டி வரை, காருண்யா நகர் முதல் அன்னுார் கணேசபுரம் என, நான்கு உத்தேச வழித்தடங்களில், மொத்தம், 136 கி.மீ., துாரத்துக்கு, 'மெட்ரோ' ரயில் இயக்க, அறிக்கை தயாரித்துள்ளது.

'மெட்ரோ' ரயில் காரணமாக, நகரின் நடுவே நடந்து வரும் மேம்பால திட்ட பணிகள் பாதிக்குமா அல்லது, மேம்பால பணிகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என, மாநில நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன், 'மெட்ரோ' ரயில் நிறுவனத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்தது. வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைவதால், 'மெட்ரோ' ஸ்டேஷன் அமைக்கவும், ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் வழியாக, போத்தனுார் வந்து, வெள்ளலுார் சென்றடையும் வகையிலும், உக்கடத்தில் இருந்து குறிச்சி பிரிவு வழியாக போத்தனுார் சென்று வெள்ளலுார் செல்தல் அல்லது சுந்தராபுரம், சாரதா மில் ரோடு வழியாக வெள்ளலுார் செல்லும் வகையிலும், வழித்தடம் அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:'மெட்ரோ' ரயில் இயக்க, இருபுறமும் தலா, 3.5 மீட்டர் அகலம் என, 7 மீட்டர் நிலம் போதும் என, அத்துறையினர் தெரிவிக்கின்றனர். சில இடங்களில் தரையிலும், சில இடங்களில் நிலத்தடியிலும், சில இடங்களில் மேலேயும் இயக்க வாய்ப்பிருக்கிறதா என ஆலோசிக்கின்றனர்.அவிநாசி ரோட்டில், உயர்மட்ட பாலம் கட்ட இருப்பதால், துாண்களை ஒட்டியவாறு, 'மெட்ரோ' ரயில் இயக்க ஆலோசித்துள்ளனர். திருச்சி ரோட்டில் இயக்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

உக்கடத்தில் இருந்து வெள்ளலுார் செல்ல, தற்போது போடப்படும் பாலத்துக்கு அருகே துாண் கட்டி கொண்டு செல்ல வேண்டும் அல்லது நிலத்துக்கு கீழ் செல்ல வேண்டும். இதற்கு தேவையான இடம் கையகப்படுத்த வேண்டும்.தரையில் செல்வதாக இருப்பின், ரோட்டை கடப்பது; சிக்னல் பராமரிப்பது; குறுக்கு ரோடுகளை கடப்பது உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். இந்த சிக்கல்கள் தொடர்பாக, அரசின் கவனத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X