பொது செய்தி

தமிழ்நாடு

வ.உ.சி., பூங்காவுக்கு சிக்கல்: நெருக்கடியில் மாநகராட்சி!

Added : ஜன 16, 2020
Advertisement

கோவை:மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கோவை வ.உ.சி., பூங்காவை மேம்படுத்த, நிதி திரட்ட முடியாமல், அல்லாடுகிறது மாநகராட்சி.

கோவை நகரின் மையப்பகுதியில், மிக குறுகலான இடத்தில், வ.உ.சி., உயிரியல் பூங்கா நடத்த, மத்திய வன உயிரின ஆணையம் ஆட்சேபனை தெரிவித்தது.பூங்காவை மூட வேண்டிய சூழல் உருவானதால், அருகில் உள்ள இடத்தை சேர்த்து, 'ஸ்மார்ட் சிட்டி' நிதி ரூ.20 கோடியில் மேம்படுத்த, மாநகராட்சி முடிவு செய்தது.

திட்ட அறிக்கையை ஆணையத்தில் சமர்ப்பித்தபோது, 2019, மார்ச் வரை அவகாசம் அளித்தது. லோக்சபா தேர்தல் பணி வந்ததால், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.ஆக., வரை எவ்வித முயற்சியும் எடுக்காததால், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது.நேரில் ஆஜரான அதிகாரிகள், 29 ஏக்கருக்கு பூங்காவை விஸ்தரிக்கப் போவதாக உறுதி கூறினர். கடிந்து கொண்ட மத்திய அரசு அதிகாரிகள், 2020, மே மாதத்துக்குள் பணியை துவக்க வேண்டும்; இரு மாதத்துக்கு ஒருமுறை, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, ரூ.81 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தொகை பெரியதாக இருப்பதால், பேஸ்-1, பேஸ்-2 என பிரித்து செயல்படுத்த முடிவு செய்து, முதல்கட்ட பணிக்கு ரூ.36 கோடி தேவைப்படும் என மதிப்பிட்டது.அதற்கு, ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில், ரூ.19.5 கோடியில் சர்வதேச ஹாக்கி மைதானம் கட்டும் திட்டத்தை கைவிட்டு, வ.உ.சி., பூங்காவை மேம்படுத்தும் பணிக்கு ஒதுக்க ஆலோசிக்கப்பட்டது.

இது தொடர்பாக, 'ஸ்மார்ட் சிட்டி' இயக்குனரவை கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட, ஹாக்கி மைதானம் திட்டத்தை கைவிட, உயரதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தலாம் என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஆணையத்தில் இருந்து உறுதிமொழி கடிதம் பெற்றபின் முடிவெடுக்கலாம், வ.உ.சி., பூங்காவுக்கு வேறொரு திட்டத்தில் நிதி ஒதுக்கலாம்' என கூறினர்.

ஆனால், மே மாதத்துக்குள் பணியை துவக்கி, மத்திய வன உயிரின ஆணையத்தில் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில், பூங்காவை இழுத்து மூட வேண்டிய நெருக்கடி ஏற்படும்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'திட்ட அறிக்கை தயாராக இருக்கிறது. வ.உ.சி., பூங்காவுக்கு வந்துள்ள நெருக்கடியான நிலை தொடர்பாக, நகராட்சிகளின் நிர்வாக ஆணையரிடம் நேரடியாக விளக்கியுள்ளோம். நிதி ஒதுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X