பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலோ பொங்கல்! உழவுத்தொழில் செழிக்க உற்சாக கொண்டாட்டம்...:கால்நடைகளுக்கு நன்றி சொல்ல தயாராக கிராமங்கள்

Added : ஜன 16, 2020
Advertisement

உடுமலை:உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லும் பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன், துவங்கி, சூரியனுக்கு பொங்கலிட்டு, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

உடுமலை சுற்றுப்பகுதிகளில், பொங்கல் விழா கொண்டாட்டங்கள், நேற்றுமுன்தினம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. வீடுகளில், வேப்பிலை, பூளை மற்றும் ஆவாரம் பூ வைத்து, காப்பு கட்டினர்.தொடர்ந்து, நேற்று காலை, வாசல்களில் வண்ண கோலமிட்டு, அடுப்பு வைத்து, மண் பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு தோரணம் அமைத்து, சூரியனுக்கு பொங்கலிட்டனர்.

பின்னர், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும், இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் கைகொடுத்து, விவசாயம் செழிக்க வேண்டும் என வழிபாடு நடத்தினர்.

அமராவதி ஆயக்கட்டு பகுதியில், அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களின் முன், பொங்கல் பானைகளை வைத்து, சூரியனை வணங்கி, பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது.நகரப்பகுதியில், பொங்கலையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில்களில், நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

குடியிருப்புகளில் விளையாட்டுப்போட்டிகள் நடத்தி, குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மார்கழி மாத இரவுகளில், கிராமங்களில் பழக்கப்படுத்தப்பட்ட சலகெருதுகளுக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பார் போற்றும் பட்டி பொங்கல்உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப்பொங்கல், உடுமலை பகுதியில் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது.

விளைநிலங்களில், மூங்கிலால் ஆன தடுப்புகளை கட்டி, மையப்பகுதியில், சிறிய தெப்பக்குளம் அமைத்து, அதில் நீர் நிரப்பி, மூலிகைச்செடிகள் மற்றும் கரும்பால் தோரணம் அமைப்பார் கள்.காளை, கறவை மாடு, ஆடு ஆகியவற்றை, நீர்நிலைகளில், குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டுவார்கள். அலங்கரிக்கப்பட்ட கால்நடைகளை பட்டி எனப்படும் பகுதியில் நிறுத்தி, பொங்கல் வைப்பார்கள்.பின்னர், நாட்டுப்புற பாடல்களை பாடி, கால்நடைகளை வழிபட்டு, அவற்றுக்கு பொங்கல் ஊட்டுகின்றனர். மாட்டு பொங்கல் கொண்டாட்டத்துக்காக கிராமங்களில் நேற்றே பணிகள் தீவிரமாக நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X