பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரியம் பாதுகாக்க மார்கழி மாதத்தில் பயிற்சி: பொங்கலில் அரங்கேறும் சிறப்பு கலைகள்

Added : ஜன 16, 2020
Advertisement
 பாரம்பரியம் பாதுகாக்க மார்கழி மாதத்தில் பயிற்சி:  பொங்கலில் அரங்கேறும் சிறப்பு கலைகள்

உடுமலை:பாரம்பரிய கலைகள் அழியாமல் தடுக்க, மார்கழி மாத இரவுகளில் பயிற்சி பெறும் இளைஞர்கள், பொங்கல் திருநாளில், கலைகளை உற்சாகத்துடன் ஆடி மகிழ்வது இன்றும் தொடர்கிறது.

உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களில், சலகெருது மறித்தல், தேவராட்டம், ஒயிலாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய கலைகள் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. இதற்கு, ஆதாரமாக மார்கழி மாத இரவுகளில், அக்கலைகளுக்கான பயிற்சிகள், இன்றளவும் கிராமங்களில் வழங்கப்படுகிறது.


கிராமத்து தெய்வம்



பொங்கலன்று மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு உரியவை என இப்பகுதி மக்களால் கருதப்படுகிறது. இத்தகைய கன்றுகள், கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டதும், தங்கள் கிராமத்துக்கென அவற்றை சலகெருதாக மக்கள் தேர்வு செய்கின்றனர்.தேர்வு செய்யப்படும் காளைகளுக்கு மூக்கணாங்கயிறு கூட அணிவிக்காமல் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு, இறைவனுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது.

காளைகள் வளர்ந்ததும், சலகெருத்து மறித்தலுக்கு பயிற்சி துவங்கும்.மார்கழி மாத இரவுகளில் இப்பயிற்சி சலகெருதுகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, ஆட்டக்காரர்கள், முன்புறம், மூங்கில் குச்சிகளை வைத்தபடி, முன்பு ஆடிச்செல்ல அதற்கேற்ப, சலகெருது அவர்களை பின்தொடரும். முரண்டு பிடிக்கும் காளைகள், தொடர் பயிற்சியால் சலகெருதுவாக மாறவும், அந்த ஆட்டத்தை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

தை முதல் நாளில், கிராமத்து மக்கள் சார்பில் சலகெருதுகளுக்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படும்.அவ்வகையில், குறிச்சிக்கோட்டை, கொங்கலகுறிச்சி, ஜல்லிபட்டி, ராஜாவூர், பெரியகோட்டை, அம்மாபட்டி, பொட்டையம்பாளையம், லிங்கம்மாவூர் உட்பட பல கிராமங்களில் நேற்று சலகெருதுகளுக்கான சிறப்பு பூஜை நடந்தது.


இது ஸ்பெஷல் ஆட்டம்



தேவதுந்துமி எனப்படும் சிவனுக்கு உரிய உறுமி இசையை ஆதாரமாகக்கொண்டு, விண்ணுலக தேவர்களால் ஆடப்பட்டதால், தேவராட்டம் என்ற பெயரில் பாரம்பரிய கலை அழைக்கப்படுகிறது.32 அடவுகளை கொண்ட இந்த ஆட்டம், வேட்டை, போர்பயிற்சி உட்பட பல்வேறு மறைமுக பயிற்சிகளையும் உள்ளடக்கியதாகும். முன்பு, மார்கழி மாத குளிரை விரட்டவும், இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி, பயிற்சி அளிக்கவும், இந்த கலை பயன்பட்டுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரால் மட்டும் ஆடப்பட்டு, தற்போது பரவலாக அனைத்து கிராமங்களிலும், இக்கலை ஆடப்படுகிறது.குறிப்பிட்ட வயதை எட்டியதும், தேவராட்டம் ஆடி பழக கிராம இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பின்னர், தைப்பொங்கலன்று, இந்த இளைஞர்கள், கிராம மக்கள் முன்னிலையில், தேவராட்டம் ஆடுகின்றனர்.கோவில் மற்றும் கிராம பொது இடத்தில், இந்த ஆட்டத்தை ஆடி மகிழ்கின்றனர். பல்வேறு மாற்றங்கள் வந்தாலும், கிராமத்து இளைஞர்கள், இந்த பண்பாட்டையும், கலையையும், இன்றளவும் பாதுகாத்து வருகின்றனர். நேற்றும், பல்வேறு கிராம இளைஞர்கள், இந்த பாரம்பரிய கலைகளை ஆடி, பொங்கலை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X