ஒன்றிய கவுன்சிலருக்கு அதிகாரம் இல்லை! மாற்றம் கொண்டு வர கோரிக்கை| Dinamalar

ஒன்றிய கவுன்சிலருக்கு அதிகாரம் இல்லை! மாற்றம் கொண்டு வர கோரிக்கை

Added : ஜன 16, 2020

அன்னுார்:'ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு எந்த நிர்வாக அங்கீகாரமும் இல்லாததால், அதில் மாற்றம் செய்ய வேண்டும்' என, ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சிகளில், கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள், அவர்களுக்கு மேலாக ஊராட்சி தலைவர். இதையடுத்து தலா 5,000 வாக்காளர்கள் கொண்ட வார்டுக்கு, ஒரு ஒன்றிய கவுன்சிலர். அவர்களுக்கு மேலாக ஒன்றிய சேர்மன்.இதையடுத்து தலா 50,000 வாக்காளர்களை கொண்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர். அவர்களுக்கு மேலாக மாவட்ட ஊராட்சி தலைவர். இந்த மூன்றடுக்கில் ஊராட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் அதிகாரங்கள் உள்ளன என்றும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் கூறியதாவது:ஊராட்சிகளில், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூல் செய்வது, குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, சுகாதாரம், அரசு ஒதுக்கும் நிதியில் வளர்ச்சி பணிகள் செய்வது, துப்புரவு பணியாளர், மோட்டார் ஆபரேட்டர், துாய்மை காவலர் ஆகியோருக்கு பணிகள் தருவது என, பல அதிகாரங்கள் உள்ளன.ஆனால், 5,000 வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை. ஒன்றிய பொது நிதியில் பணிகள் தேர்வு செய்யும் பணி மட்டும் தான் உள்ளது.ஒன்றியத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவது தான். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு என, அறையோ, இருக்கையோ கூட கிடையாது.ஒன்றிய சேர்மன், துணை சேர்மன்களுக்கு மட்டும் தான் இருக்கைகள் உள்ளன. இந்த முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சில நிர்வாக அதிகாரங்கள் தர வேண்டும். அப்போது தான் உள்ளாட்சி தத்துவம் நிறைவடையும். இல்லாவிட்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு கூடுதல் அதிகாரங்களும், சிலருக்கு அதிகாரம் இல்லாத நிலையும் தான் நீடிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X