கோவை புறநகர் பகுதிகளில், கடந்தாண்டு இரு பருவமழைகளும் திருப்தியாக பெய்ததால், நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால்,உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கு,நன்றிதெரிவிக்கும் வகையில்,பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் அன்னுார், பெ.நா.பாளையம், சூலுார், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய விளை நிலங்கள், 'லே-அவுட்'களாக மாறினாலும், நெல், கரும்பு, வாழை, பாக்கு, தென்னை, காய்கறி பயிர்கள், தானிய வகைகள் சாகுபடி பரப்புகள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.
உழவுக்கு காளைகளை பயன்படுத்துவது குறைந்து, நவீன இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்தாலும், பால் உற்பத்திக்காக கால்நடை வளர்ப்பிலும், காங்கேயம் காளைகள் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதனால், ஆண்டுதோறும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு, இரு பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்துள்ளதால், விவசாயிகள் உற்சாகத்துடன் பொங்கல் விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா துவங்கியது. வீடுகளில், வேப்பிலை, பூளை மற்றும் ஆவாரம் பூ வைத்து, காப்பு கட்டினர்.
நேற்று அதிகாலை, வாசல்களில் வண்ண கோலமிட்டு, அடுப்பு வைத்து, மண் பானைகளில் பொங்கலிட்டு, கரும்பு தோரணம் அமைத்து, சூரியனுக்கு பொங்கலிட்டனர்.பின், விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, ஆடிப்பட்டமும், தைப்பட்டமும் கைகொடுத்து, விவசாயம் செழிக்க வேண்டும் என, வழிபாடு நடத்தினர்.
இன்று விவசாயிகள் கொண்டாடும் மாட்டுப் பொங்கலுக்காக, விவசாயத்தின் முதுகெலும்பான மாடுகளை சுத்தம் செய்து, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி இருந்தனர்.விவசாய நிலத்தில் பட்டி அமைத்து, தெய்வங்களுக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து, வழிபட விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாடு விரட்டும், தெப்பக்குளம் தாண்டுதலும் நடக்கும்.மார்கழி மாதம் முழுவதும், வீட்டு வாசலில் கோலங்களில் வைக்கப்படும் பிள்ளையார்களை, நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்தும், மலைக்கோவில்களுக்கு சென்று பூ பறிக்கும் விழா, மூன்றாம் நாள் விழாவாக கொண்டாடப்படும்.விழாவையொட்டி, கிராமங்களிலும், மலைக்கோவில்களிலும், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மழையால் விவசாயம் செழிப்படைந்து உள்ளதால், பொங்கல் பண்டிகையை விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும், பொதுமக்களும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE