அரண்மனையை துறந்து அமைதி வாழ்க்கை: ஹாரி - மேகன் முடிவின் பின்னணி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (18)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லண்டன்; அண்ணன்--தம்பி பிரச்னைக்கு அரச குடும்பமும் விலக்கல்ல என்பது ஹாரி விலகல் முடிவு மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஐரோப்பிய நாடான, பிரிட்டன் அரச குடும்பத்தினருக்கு, 2020ம் ஆண்டு, குழப்பமாக துவங்கி உள்ளது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மகனான, சார்லஸ் - டயானா தம்பதியின் இளைய மகன் இளவரசர் ஹாரி, தனது மனைவியும், நடிகையுமான இளவரசி மேகன் மெர்க்கல் ஆகியோர், அரச குடும்பத்தை விட்டு விலகி நிற்க முடிவு செய்துள்ளதாக, சமீபத்தில் அறிவித்தனர். பிரிட்டன் மற்றும் வட அமெரிக்க நாடான, கனடாவிலும், மாறி மாறி வசித்து, சொந்தமாக வேலை செய்து சம்பாதிக்க விரும்புவதாக தெரிவித்தனர்.இதனால், பிரிட்டன் அரச குடும்பம் அதிர்ச்சிக்குள்ளானது. உடனடியாக அரச குடும்ப உறுப்பினர்களை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ராணி இரண்டாம் எலிசபெத் விவாதித்தார். இந்த கூட்டத்தின் முடிவில், ஹாரியின் முடிவை ஆதரிக்க, அரச குடும்பத்தினர் ஒரு மனதாக முடிவு செய்தனர்.

ஆனால், உடனடியாக விலகாமல், அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து, படிப்படியாக அவர்கள் விலக வேண்டும் என, ராணி எலிசபெத் விருப்பம் தெரிவித்தார். 'அரச குடும்பத்தினரே, இந்த விவகாரத்தை சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்வர்' என, பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று முன் தினம் அறிவித்தார்.

இந்நிலையில், ஹாரி மற்றும் மேகனுடன், அடுத்தடுத்த கட்ட பேச்சு வார்த்தைகளில், அரச குடும்பத்தினர் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ஹாரி ஏன் இப்படியொரு முடிவை எடுத்தார்? அதிரடியாக இப்படி அறிவிக்க காரணம் என்ன? ஹாரிக்கும் அவரது அண்ணன் வில்லியம்சுக்குமான உறவு எப்படி உள்ளது என்பது போன்ற அரண்மனை அரசியல் குறித்து ஒரு சிறிய 'ரவுண்ட் - அப்'.


ஹாரி - மேகன் யார்


பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேரன், இளவரசர் சார்லஸ் --- இளவரசி டயானா தம்பதியின், இரண்டாவது மகன் தான், இளவரசர் ஹாரி. 1984 செப்., 15ல் லண்டனில் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த இவர், பிரிட்டன் ராணுவத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். 2007 - 2008ல் பத்து வாரங்கள் ஆப்கானிஸ்தானில் பிரிட்டன் படையில் பணியாற்றினார். தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதில் ஆர்வமிக்கவர்.


மேகன் மெர்க்கல்ஹாரியின் மனைவி மேகன் மெர்க்கல். 1981 ஆக., 4ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தார். பட்டப்படிப்பை முடித்த இவர், 'டிவி' நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் நடித்தார். 2011ல் நடிகர் டிரீவர் இன்ஜெல்சனை திருமணம் செய்தார். 2013ல் விவாகரத்து பெற்றார். இளவரசர் ஹாரியை காதலித்த இவர், நடிப்பதை நிறுத்தினார். இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.


திருமணம்ஹாரி - மேகன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக, 2017, நவ., 27ல், பிரிட்டன் அரண்மனை அறிவித்தது. இவர்களது திருமணம், 2018 மே, 19ல் பிரிட்டனின் விண்ட்சர் அரண்மனையில் உள்ள சர்ச்சில் நடந்தது. 2019, மே, 6ல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இவரது பெயர் ஆர்ச்சி மவுன்ட்பேட்டன் வின்ட்சர்.


மூத்த இளவரசிபிரிட்டன் இளவரசிகளிலேயே மேகன் தான், அதிகமான, அதாவது, 36 வயதில் திருமணம் செய்தவர். ஹாரியை விட மூன்று வயது மூத்தவர்.


பக்கிங்ஹாம் அரண்மனை

Advertisement*பிரிட்டனின் புகழ்மிக்க இடங்களில் ஒன்று, 'பக்கிங்ஹாம் அரண்மனை'. இங்கு தான் ராணி இரண்டாம் எலிசபெத், அவரது கணவர், இவர்களது மகன்கள், பேரக்குழந்தைகள் வசிக்கின்றனர்.

*இது, 1703ல் பக்கிங்ஹாம் பிரபு, ஜான் ஜெப்பீல்டு என்பவருக்காக கட்டப்பட்டது. இதை, 1761ல் பிரிட்டன் அரசர், மூன்றாம் ஜார்ஜ் விலைக்கு வாங்கினார்.

*கடந்த, 1837ல் விக்டோரியா ராணி, முதன்முதலாக இதனை அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக்கினார்.

*இது, 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

*இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனி இதன் மீது ஒன்பது குண்டுகளை வீசியது.

*இங்கே, தியேட்டர், ஏ.டி.எம்., டென்னிஸ் கோர்ட், ஏரி, ஹெலிகாப்டர் இறங்கு தளம், மருத்துவமனை, ரெஸ்ட்ராரென்ட், 92 அலுவலகங்கள், 775 அறைகள், 78 பாத்ரூம்கள், 760 ஜன்னல்கள், 1,154 கதவுகள் உள்ளன.

*கடந்த, 1883ல் மின்சார வசதி செய்யப்பட்டது. அரண்மனையில், 40 ஆயிரம் 'பல்ப்'கள் உள்ளன.அரண்மனையின் சில பகுதிகள், சுற்றுலாப்பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.


இதற்கு முன் வெளியேறியவர்கள்இளவரசர் ஹாரி - மேகன் தான், பிரிட்டன் அரச குடும்பத்தில் தானாக வெளியேறும் முதல் தம்பதியினர். இதற்கு முன் சில காரணங்களுக்காக அரச குடும்பம், அதன் சில உறுப்பினர்களை வெளியேற்றியுள்ளது.

*கடந்த, 1936 டிச., 11ல், பிரிட்டன் அரசர் எட்டாம் எட்வர்டு, அமெரிக்கப் பெண் வில்லீஸ் சிம்சனை மணப்பதற்காக, தன் பதவியை துறந்தார். அதனால், அவர், அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

*கடந்த, 1996 ஆக., 28ல் இளவரசி டயானா, இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்ததால் அரச குடும்ப அந்தஸ்தை இழந்தார். 1997 ஆக., 31ல் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.


ஆறாவது இடம் யாருக்குபிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் - இளவரசர் பிலிப் தம்பதியினருக்கு, சார்லஸ், ஆன்ட்ரூ, எட்வர்டு, ஆன் என நான்கு குழந்தைகள். எலிசபெத்திற்கு பின் அரச பட்டத்தை பெறுவதில், சார்லஸ் முதலிடம் வகிக்கிறார். இதற்கு அடுத்து, இவரது மூத்த மகன் வில்லியம்ஸ் உள்ளார். 3, 4, 5வது இடத்தில் வில்லியம்சின் குழந்தைகள் உள்ளனர். ஆறாவது இடத்தில் ஹாரி, ஏழாவது இடத்தில் அவரது மகன் உள்ளனர். எட்டாவது இடத்தில் எலிசபெத்தின் மகன் ஆன்ட்ரூ உள்ளார். தற்போது ஹாரி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதால், ஆறாவது இடத்துக்கு ஆன்ட்ரூ முன்னேறுகிறார். இப்பட்டியலில் இளவரசரின் மனைவியருக்கு இடமில்லை.


காதல் முதல் கனடா வரை!மார்ச் 14, 2019: கென்சிங்டன் அரண்மனையில் ஒன்றாக வசிப்பதில் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் ஹாரிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியது.

ஏப்., 3, 2019: கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறிய ஹாரி - மேகன் தம்பதியினர், பிராக்மோர் அரண்மனைக்கு குடிபெயர்ந்தனர்.

ஜூன் 20, 2019: 'ராயல் பவுண்டேஷன்' தொண்டு நிறுவனத்தில் இருந்து விலகுவதாக இத்தம்பதி அறிவிப்பு.

நவ., 14, 2019: கிறிஸ்துமஸ் பண்டிகையை அரச குடும்பத்துடன் கொண்டாடப் போவதில்லை என்றும், ஆறு வார பயணமாக, கனடா செல்வதாகவும் அறிவிப்பு.

ஜன., 8: 2020: தாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புவதாகவும், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு.

ஜன., 13: அரண்மனையில் ராணி எலிசபெத் தலைமையில், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதற்கு ஹாரிக்கு, ராணி அனுமதி.

ஜன., 14: ஹாரி - மேகன் தம்பதி பிரிட்டன் மற்றும் கனடாவில் வசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


'முள்கிரீடம்'
இளவரசர் ஹாரி, ராஜ வாழ்க்கைக்கு எப்போதும் ஆசைப்பட்டதில்லை. அரச குடும்பத்தின் பொறுப்புகளை துறந்து, பொருளாதார ரீதியில் சுதந்திரமாக வாழவே விரும்புகிறார்.

* ஆப்கானிஸ்தானுக்கு, கடந்த, 2013ல் சென்ற ஹாரி, பிரிட்டன் படையினருடன் நான்கு மாதம் பணியாற்றினார். அப்போது, சக வீரர்கள், தன்னை இளவரசராக பார்ப்பதை அவர் விரும்பவில்லை. 'கேப்டன் வேல்ஸ்' என அழைப்பதையே ஹாரி விரும்பினார்.

* ஹாரியின் அம்மா இளவரசி டயானாவை எங்கு சென்றாலும் 'மீடியா' துரத்தின. இதன் காரணமாக, அவர், கார் விபத்தில் மரணம் அடைந்தார். அப்போது ஹாரிக்கு, 12 வயது. அம்மாவுக்கு நேர்ந்த சோகம் அவரது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரபலம் என்ற அடையாளம் இல்லாமல், 'மீடியா' பார்வை படாமல் சாமான்ய மனிதராக வாழவே விரும்பினார். அம்மாவை போல சேவை பணிகளில் அதிக கவனம் செலுத்தினார்.

* அண்ணன் வில்லியம்ஸ் உடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அரசு பதவி உட்பட அனைத்து விஷயங்களிலும், வில்லியம்சிற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக கருதினார்.

* ஹாரியின் மனைவி மேகனுக்கு எதிராக நிறவெறியை துாண்டும் கருத்துக்களை பிரிட்டன், 'மீடியாக்கள்' கிளப்பின. இதுவும் ஹாரிக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படி பிரச்னை மேல் பிரச்னை துரத்த, அரச பொறுப்புகளை துறக்க முடிவு செய்தார்.

ஹாரியும், அவரது மனைவியும் புதிய வாழ்க்கையை வாழப் போவதாக முடிவு எடுத்து உள்ளனர். அதற்கு அரச குடும்பம் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்களது தனிப்பட்ட விருப்பத்தில் தலையிட, அரச குடும்பம் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. இதில் இறுதி முடிவு எடுக்கும் வரை, ஹாரி தம்பதி, கனடாவிலும், பிரிட்டனிலும் வசிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- ராணி எலிசபெத்

நான் எலிசபெத் ராணியின் மிக தீவிர ரசிகன். அரச குடும்பத்தினர், இந்த நாட்டின் அற்புதமான சொத்து. இந்த விவகாரத்தில், மற்றவர்கள் தலையீடு இன்றி, அரச குடும்பத்தினரே பேசி, சுமுக தீர்வு காண்பர் என நம்புகிறேன்.

போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர்

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
16-ஜன-202018:25:14 IST Report Abuse
Subramanian Sundararaman எல்லாமே இன பேதங்கள் . இதுவரை வந்த இளவரசர்களின் மனைவிகள் commoner ஆகஇருந்தாலும் அவர்கள் whites . ஆனால் மேகனின் தந்தை கறுப்பினத்தவர் . தாய் white . இனவெறிதான் மேகன் ஹாரி தம்பதியர் வெளியேற காரணம் . இளவரசராக ராஜ வாழ்வு வாழமுடியும் என்றாலும் ஒரு சாதாரண வாழ்வுக்கு தயாரிக்கிவிட்டார் ஹாரிஸ் -மேகன் . ஹாரிஸ் போர்க்களத்தில் கேப்டன் ஆக பணியாற்றியுள்ளார் . நம் நாட்டோடு ஒப்பிட்டு பார்க்கவேண்டும் . படிக்காமலே டாக்டர் பட்டம் , போர்க்களம் எப்படியிருக்கும் என்று அறியாமலே General ( சினிமா மற்றும் அரசியல் தளபதி ) .ராஜ வழக்கை .வெளியேற மனம் வருமா ?
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202015:04:12 IST Report Abuse
Lion Drsekar இதை விட அதிகமான சொத்து நம் மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடம் இருக்கிறது என்பதை உலகறியும், இங்கு குடும்பம் வளர வளர அவர்களது சொத்தும் வளர்கிறது, மக்கள் இவர்களுக்காக வாழ்வதுதான் விசித்திரம்,
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜன-202015:03:58 IST Report Abuse
Lion Drsekar இதை விட அதிகமான சொத்து நம் மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்களிடம் இருக்கிறது என்பதை உலகறியும், இங்கு குடும்பம் வளர வளர அவர்களது சொத்தும் வளர்கிறது, மக்கள் இவர்களுக்காக வாழ்வதுதான் விசித்திரம், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X