தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் தை பொங்கல் திருநாள் கோலாகலம்

Added : ஜன 16, 2020
Advertisement

ஈரோடு: தமிழர் திருநாள், உழவர்களின் அறுவடை திருநாள் என கூறப்படும் தை பொங்கல் திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் நகர பகுதியில், தை முதல் நாள் உதிக்கும் நேரத்தில், வாசலில் கோலமிட்டனர். புனித நீராடி, புத்தாடை அணிந்து சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் பொங்கல் படையலிட்டு மக்கள் வழிபட்டனர். கோட்டை பகுதி மக்கள் சார்பில், கோவில் வளாகம் முன், சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது. அதே போல், வ.உ.சி., பூங்கா நடைபயிற்சி மையத்தில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. இதில், பெண்கள் பலர் கும்மியடித்து மகிழ்ந்தனர். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் சூரியன் சாயா தேவி சன்னதியில், கோவில் சார்பில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. காசிபாளையம் மலை முருகன் கோவில், கருங்கல்பாளையம் சுப்பிரமணியர் கோவில், பெரியமாரியம்மன், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் கடவுளான திண்டல் வேலாயுத சுவாமி கோவிலில், மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


* பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில், அத்தாணி, கைகாட்டி ஆஞ்சநேயர் கோவில் கோவில்களில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பக்தர்களின் எண்ணிக்கை வழகத்தை விட சற்று கூடுதலாக இருந்தது.


* புன்செய்புளியம்பட்டி அண்ணாமலையார், மாரியம்மன், காமாட்சியம்மன், சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாடினர். மாரியம்மன் கோவிலில், பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டியில், ஏர் கலப்பை பூட்டி, கன்று குட்டிகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடந்தது. சூரிய பகவானை நோக்கி, பானை வைத்து மஞ்சள் குலை போட்டு, கரும்பு வைத்து பால் பொங்கும் போது, பெண்கள் குலவை எழுப்பி கொண்டாடினர். இதில், பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடந்தது.


* ஈரோடு, கருங்கல்பாளையம் வண்டியூரன் கோவில் வீதியில் உள்ள கலைத்தாய் அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் சார்பில், பொங்கல் திருவிழா பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்தன. கூட்டு பொங்கல் வைத்து, சூரியனுக்கு படையலிட்டு, பின் செங்கரும்புடன் அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பம், பம்பரம், டயர் வண்டி ஓட்டுதல் போட்டி, உண்டிவில் அடித்தல், தப்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வகை கலை போட்டிகள் நடந்தன. சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை, பலரும் கலந்து கொண்டனர். நிறைவில், மூத்த கூத்து கலைஞர் ஒருவருக்கு பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கலைத்தாய் அறக்கட்டளை தலைவர் மதேஸ்வரன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X