மாவட்ட கலெக்டர் உத்தரவால் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கலெக்டர் உத்தரவால் ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் ஆய்வு

Added : ஜன 16, 2020

ஓசூர்: ஓசூரில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக, நமது நாளிதழில் செய்தி வெளியான நிலையில், இந்த நிலத்தை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு பழைய ஹட்கோ பகுதி பேஸ், 14ல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், 1977ல் வீடுகள் கட்டி விற்பனை செய்யப்பட்டன. இங்கு, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய, 24 சென்ட் காலியிடம் (சர்வே எண்: 866) இருந்தது. இங்கு, தேவையான அடிப்படை வசதிகளை செய்ய, அப்போதைய ஓசூர் டவுன் பஞ்., வசம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தானபத்திரம் மூலம், பழைய ஹட்கோ பகுதியை ஒப்படைத்தது. இதனால், தண்ணீர் தொட்டியுடன் இருந்த, 24 சென்ட் காலியிடமும், தற்போது ஓசூர் மாநகராட்சி வசம் தான் இருக்க வேண்டும். ஆனால், 2008 வரை பயன்பாட்டில் இருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டு, காலியிடமும் பட்டாவாக மாற்றப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக, நமது நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதை பார்த்த மாவட்ட கலெக்டர் பிரபாகர், உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதனால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை சர்வேயர் செல்வம், வருவாய் ஆய்வாளர் சந்திரன், சென்னத்தூர் வி.ஏ.ஓ., ராஜ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், 'தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தான பத்திரம் வழங்கும்போது இருந்த, தண்ணீர் தொட்டியுடன் கூடிய, 24 சென்ட் நிலத்தை காணவில்லை என்பது தெரிகிறது. இதனால், மாநகராட்சி நிலம் பட்டாவாக மாறி இருக்கலாம்' என்றனர். மாவட்ட கலெக்டர் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். 1984 ஆவணப்படி, மாநகராட்சி நிலத்தை பட்டா நிலம் என கூறுகின்றனர். அப்படியானால், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வழங்கிய, 24 சென்ட் காலி இடம் எங்கே போனது, என்ற கேள்வி எழுந்துள்ளது. 1977ல், தான பத்திரம் மூலம், பழைய ஹட்கோ பகுதி ஓசூர் டவுன் பஞ்., வசம் ஒப்படைக்கப்பட்ட ஆவணம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு கிடைத்து விட்டால், மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சிக்கல் வரும் என்பது உண்மை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X