இந்த செய்தியை கேட்க
புதுடில்லி : உலக அளவில் பேஸ்புக்கை விட அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆப் ஆக சீன சமூகவலைதளமான டிக்டாக் இடம்பிடித்துள்ளது. இதுவரை 700 மில்லியன் பேர் டிக்டாக் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.

உலக அளவில் அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஆப்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 850 மில்லியன் பயனாளர்களுடன் வாட்ஸ்ஆப் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. முந்தைய ஆண்டை விட, 2019 ம் ஆண்டின் 4 வது காலாண்டில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. Sensor Tower வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, வாட்ஸ்ஆப்பிற்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படும் ஆப் ஆக டிக்டாக் உள்ளது.

பேஸ்புக், பேஸ்புக் மெசஜ்சர் ஆப்களை விட டிக்டாக் ஆப்பை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்தியாவில் 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக இளைஞர்களே இந்த ஆப்பை அதிகம் பயன்படுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு நிறுவனமான Checkpoint நடத்திய ஆய்வில், டிக்டாக் ஆப்பை எளிதில் ஹேக் செய்து, ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பெற முடியும் என எச்சரித்துள்ளது.

ஹேக்கர்கள் எஸ்எம்எஸ் மூலம் லிங்க் ஒன்றை அனுப்புகிறார்கள். இதனை கிளிக் செய்த உடன் ஹேக்கர்கள், அந்த டிக்டாக் கணக்கை ஹேக் செய்து எந்த வீடியோவையும் அழிக்கவோ, பதிவிடவோ அல்லது தனிப்பட்ட வீடியோக்களை பொது வெளியில் பதிவிடவோ முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. டிக்டாக் பயன்படுத்துவோரின் மொபைலில் உள்ள தனிப்பட்ட தகவல்களையும் திருட முடியும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தாலும் டிக்டாக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இந்திய அளவிலும், உலக அளவிலும் அதிகரித்து வருகிறது என்றே கூறப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE