திருவள்ளூர் :கடத்தப்பட்டதாக கூறப்பட்ட, அ.தி.மு.க., பெண் கவுன்சிலரை, போலீசார், நேற்று, திருவள்ளூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். பின், அவரது விருப்பப்படி, அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி மனைவி, பூங்கொடி, 28. இவர், சமீபத்தில் நடந்த ஊராட்சி தேர்தலில், திருத்தணி ஒன்றியம், 2வது வார்டு கவுன்சிலராக, அ.தி.மு.க., சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த, 11ம் தேதி, திருத்தணி ஒன்றிய குழு தலைவர் தேர்தல் நடந்தது. தலைவர் பதவியை கைப்பற்றுவதில், அ.தி.மு.க.,வினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால், அன்றைய தினம், கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. இதையடுத்து, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 'திருவள்ளூர் எம்.வி., நகரில், பூங்கொடி, தன் நான்கு மாத குழந்தையுடன், அவரது தாயார் வீட்டில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், பூங்கொடி, அவரது தாய் மற்றும் குழந்தை ஆகியோரை, சிலர் அழைத்து சென்று, மிரட்டி வருவதாக, கோட்டி, எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், நேற்று அதிகாலை, பெண் கவுன்சிலர், பூங்கொடி, தன் குழந்தையுடன், திருத்தணி மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார்.
திருத்தணி டி.எஸ்.பி., சேகர், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்வரி, முருகன் ஆகியோரிடம், 'தன்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. இரு தரப்பினர் கொடுத்த நெருக்கடி காரணத்தால், என் உறவினர் வீட்டில் தங்கியிருந்தேன்,' என, பூங்கொடி கூறினார்.
அதன்பின், போலீசார் பலத்த பாதுகாப்புடன், பூங்கொடி மற்றும் அவரது குழந்தையுடன், திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, ராதிகா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
நீதிபதியிடமும், பூங்கொடி தன்னை யாரும் கடத்தவில்லை; திருவள்ளூரில் உள்ள, தாய் வீட்டிற்கு செல்கிறேன் என்றார்.
இதையடுத்து, போலீசார், எம்.வி., நகரில் உள்ள அவரது தாய் வீட்டில், பூங்கொடியையை அழைத்துச் சென்று, சேர்த்தனர். தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டின் முன் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE