பொது செய்தி

தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டில் பாய்ந்த காளைகள் அலங்காநல்லூரில் இன்று அமர்க்களம்

Added : ஜன 16, 2020
Advertisement


மதுரை :மதுரை பாலமேட்டில் நேற்று, ஜல்லிக்கட்டு விழா நடந்தது. வாடிவாசலில் சீறிப்பாய்ந்த முரட்டுக் காளைகளை மடக்கிப்பிடித்த மாடுபிடி வீரர்கள், பிடிபடாமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்கள் பரிசுகளை அள்ளினர். உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு, இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது.மதுரை, பாலமேடு கிராம மக்கள், பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி சார்பில், நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. ஓய்வு நீதிபதி மாணிக்கம் முன்னிலையில், நேற்று காலை, 8:05 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது.மொத்தம், 700 வீரர்கள், 923 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்பட்டது. சீருடை அணிந்த, 75 வீரர்கள் ஒரு சுற்றுக்கு பங்கேற்றனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை, அடுத்தடுத்த சுற்றுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.விதிமீறலில் ஈடுபட்ட வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். சிறந்த மாடுபிடி வீரர்கள், அடுத்தடுத்த சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். கார், தங்கம், வெள்ளிக் காசு, டூ - வீலர், பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்டவை வாடிவாசலில் தோரணமாக வைக்கப்பட்டன. காளைகளை பிடித்த வீரர்கள், பிடிபடாமல் தப்பிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை, 5:00 மணிக்கு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது.வீரருக்கே உரிய, 'தில்'பிரியங்கா, குடும்ப தலைவி, மதுரை:காளைகளுடன் நேருக்கு நேர் நிற்பது, உலகில் வேறெங்கும் காண கிடைக்காத அதிசயம். அது, வீரருக்கே உரிய, 'தில்'. கட்டுப்பாடுகளால் காளைகள், வீரர்களுக்கு சிரமங்கள் குறைந்துள்ளன. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பது, பெண்கள், குழந்தைகளுடன் கலந்து கொள்ள ஏதுவாக உள்ளது.கொம்பன் கடம்பன்பிரதீப், காளை வளர்ப்பவர், மதுரை: எங்களது காளை கடம்பன், மூன்று ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டில் கலந்து, வெற்றி முகத்துடன் திரும்பி வருகிறது. வாடிவாசலை விட்டு பாயும் போது, யாரும் நெருங்க முடியாத நெருப்பு போல், திமிறும் அழகே அழகு. அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டிலும் கலந்து கொள்ள உள்ளது. வீரர்கள் உடும்பு பிடி போட்டு மடக்கினாலும், சிக்காமல் தப்பும் கொம்பன்.

சிறந்த மாடு பிடி வீரர்

மதுரை, பொதும்புவைச் சேர்ந்த பிரபாகரன், 16 காளைகளை பிடித்து, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக வென்றார். 13 காளைகளை பிடித்த மதுரை ராஜா, 10 காளைகளை பிடித்த மதுரை கார்த்தி ஆகியோர் இரண்டாம், மூன்றாம் பரிசுகளுக்கு தேர்வாகினர்.
சிறந்த காளை வளர்த்த, திண்டுக்கல் மாவட்டம், எஸ்.காமாட்சிபுரம் ரமேஷுக்கு, முதல் பரிசாக, மதுரை பொன்குமார் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள காங்கேயம் பசு, கன்றுடன் வழங்கப்பட்டது. காளை குத்தி ஏட்டு படுகாயம்
பாலமேடு ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட, தேனி போலீஸ் ஏட்டு அழகுராஜா, காளை குத்தியதில் காயம் அடைந்தார். அவர் உட்பட ஆறு வீரர்கள், மூன்று மாட்டின் உரிமையாளர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டு நினைவு துாண்
வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
தமிழர் உரிமையான ஜல்லிக்கட்டை மீட்டெடுத்து, மூன்று ஆண்டுகளாக சிறப்பாக நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நினைவுத்துாண் அமைக்க, முதல்வர், இ.பி.எஸ்., உறுதி அளித்துள்ளார்.
துாண் அமையும் இடம் குறித்து, மக்கள் கருத்து கேட்கப்படும். சிறந்த மாடு பிடி வீரர்கள், மாடு வளர்ப்போரை அழைத்து, சென்னையில் விழா நடத்துவது குறித்து, பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X