பொது செய்தி

தமிழ்நாடு

வாழையில் ஜெயிக்க விவசாயிகளுக்கு 'அட்வைஸ்!' ஊடுபயிர் சாகுபடியால் கூடுதல் வருவாய்

Added : ஜன 16, 2020
Share
Advertisement
 வாழையில் ஜெயிக்க விவசாயிகளுக்கு 'அட்வைஸ்!' ஊடுபயிர் சாகுபடியால் கூடுதல் வருவாய்

உடுமலை:ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை பின்பற்றினால், வாழை சாகுபடியில், அதிக மகசூல் பெற முடியும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை ஏழு குள பாசன பகுதிகளில் வாழை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இச்சாகுபடியில், ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை கடைபிடித்தால் எக்டருக்கு, 40 டன் வரை மகசூல் பெற முடியும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அத்துறையினர் கூறியதாவது:வாழை சாகுபடியில், சீரான வளர்ச்சிக்கும், சிறப்பான மகசூலுக்கும் தரமான கன்றுகளே ஆதாரமாகும். தாய்மரத்துக்கு அருகிலுள்ள கிழங்கிலிருந்து, 2 முதல் 3 அடி உயரம் வளர்ந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளின் எடை சீராக இருத்தல் வேண்டும்.குறைந்தபட்சம், 3 மாத கன்றுகளாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட கன்றுகளின் வெளிப்புறத்திலுள்ள வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை அகற்றி விட்டு, 100 லி., தண்ணீரில், 1 லிட்டர் பஞ்சகவ்யம் மற்றும் 1 கிலோ சூடோமோனாஸ் கலந்து, கன்றுகளை நேர்த்தி செய்து பின் நடவு செய்ய வேண்டும்.பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவல்லி, ரொபஸ்டா, மோரிஸ், நேந்திரன், செவ்வாழை மற்றும் கிராண்ட்நைன் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.நேந்திரன் மற்றும் பூவன் வகைகள் உடுமலை பகுதியில் சிறப்பாக வளரக்கூடியதாகும். பூவன் ரகத்துக்கு, விலையும் சீராக கிடைக்கிறது. அதே போன்று நேந்திரன் சிப்ஸ் போன்ற மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மண்ணின் தன்மையை பொறுத்து தண்ணீர் பாய்ச்சுதல் அவசியம். ஐந்து மாத இடைவெளியில் நுண்ணுயிர் உரங்கள் கொடுக்க வேண்டும். தாய்மரத்தின் அருகில் முளைக்கும் பக்க கன்றுகளை, 15 நாட்களுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும். தாய்மரம் குலையிட்ட பிறகு அதன் அருகில் மறுதாம்பிற்கு ஒரு கன்றை விட வேண்டும். அவ்வப்போது இலைகளையும் கழித்துவிட வேண்டும்.மரங்கள் பூப்பதற்கு முன்போ அல்லது பூக்கும் சமயத்திலோ கம்புகளை கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும்.
காற்றிலிருந்து மரங்களை காப்பாற்ற வரப்பில், அகத்தி போன்ற பல்வேறு வேலிப்பயிர்களை நடவு செய்ய வேண்டும். களைச்செடிகளை கட்டுப்படுத்தி, கூடுதல் வருவாய் கிடைக்க ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.அறுவடை செய்வதற்கு ஒருவாரத்துக்கு முன் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. காய்கள் அடிபடாமல் அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில் பழம் கருப்படித்து தரம் குறைவதற்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் எக்டருக்கு, 40 டன் வரை விளைச்சல் கிடைக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X